ADDED : மார் 05, 2026 05:22 AM

குன்னுார்: குன்னுார் அருவங்காடு பயணிகள் நிழற்குடை ஜெகதளா பேரூராட்சி சார்பில் ஓவியம் வரையப்பட்டு பயணிகளை கவர்ந்து வருகிறது.
குன்னுார் ஜெகதளா பேரூராட்சி சார்பில், ஊட்டி குன்னுார் சாலையில் அருவங்காடு பகுதியில் உள்ள நிழற்குடை சீரமைக்கப்பட்டது. அதில், அழகிய வண்ணங்கள் ஓவியங்கள் வரைந்து பயணிகளை கவர்ந்து வருகிறது.
குறிப்பாக, உற்று நோக்கும் புலி, குகைக்குள் இருந்து சீறும் கரடி நேரில் பார்ப்பது போன்று பிரமிப்பை ஏற்படுகிறது. இது மட்டுமின்றி பறவைகள், அழகிய வண்ண மலர்களுடன் செடிகளும் காண்போரை கவர்ந்து வருகிறது.
இத்தகைய சிறப்பு பெற்ற ஓவியங்களை ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஓவியர் குப்புசாமி என்பவர் தனது தனித்துவமான கலைத்திறனால் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இடது கையால் ஓவியம் வரையும் அபார திறன் கொண்ட இவரின் ஓவியங்கள் சுவர்களில் பேசும் ஓவியங்களாக உள்ளது.
ஈரோடு மாவட்டம், கன்னிராவுத்தர் குளம் பகுதியை சேர்ந்த குப்புசாமி கூறுகையில்,''கடந்த,35 ஆண்டுகளாக சுவர் ஓவியங்கள் வரைந்து வருகிறேன். கும்பகோணம் ஓவியா ஆசிரியர் ராமலிங்கம் என்பவர் உட்பட இருவரிடம் ஓவியங்கள் கற்று கொண்டேன். புதுக்கோட்டை, திருப்பூர், கோவை உள்ளிட்ட இடங்களில் ரியல் எஸ்டேட் பணியின் போதே அங்கு சுவர் ஓவியங்களும் தீட்டினேன்.நீலகிரியில் கோத்தகிரி கேத்தி, ஜெகதள உட்பட அரசுத் துறையின் சுவர்களிலும் ஓவியங்கள் வரைந்துள்ளேன். திருப்பூரில் தனியார் நிறுவனம் சார்பில் மூங்கில் காடு அமைத்து அரசிடம் ஒப்படைக்கப்பட்ட சுவர்களில் ஓவியங்கள் வரைந்து, கோவை மாவட்ட கலெக்டர் மற்றும் திருப்பூர் கமிஷனரிடம் சான்றிதழ் மற்றும் பரிசுகள் பெற்றேன், இதுவரை, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுவர் ஓவியங்கள் வரைந்து உள்ளேன், என்றார்.
