/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அடிப்படை வசதிகள் கேட்டு உண்ணாவிரதம்
/
அடிப்படை வசதிகள் கேட்டு உண்ணாவிரதம்
ADDED : ஏப் 09, 2025 10:02 PM

பந்தலுலுார்; பந்தலுார் அருகே செட்டிவயல் கிராமத்தில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றித்தர வலியுறுத்தி, மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
நெல்லியாளம் நகராட்சியின், 5-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் செட்டிவயல் அமைந்துள்ளது. இங்கு, 75 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கிராமத்திற்கு செல்ல சாலை மற்றும் நடைபாதை வசதி இல்லாத நிலையில், சதுப்பு நிலப்பகுதியில் ஒற்றையடி நடைபாதையை பயன்படுத்தி வருகின்றனர். மழை காலங்களில் இந்த நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
அதேபோல், தெருவிளக்கு, நடைபாதை, சிறு பாலம், அரசு தொகுப்பு வீடுகள் என எந்த அடிப்படை வசதிகளையும் நகராட்சி நிர்வாகம் நிறைவேற்றவில்லை. இந்நிலையில், மா.கம்யூ., சார்பில் கிராம மக்கள் பங்கேற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.
நிர்வாகி மாறன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் குஞ்சுமுகமது, ரவிக்குமார், பெரியார் மணிகண்டன், கவுன்சிலர் ரமேஷ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். தொடர்ந்து, நகராட்சி கமிஷனர் முனியப்பன், டி.எஸ்.பி., ஜெயபாலன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில், ஐந்து மாத காலத்திற்குள் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருவதாக, உறுதி அளிக்கப்பட்டது. இதனால்,போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. திரளான கிராம பொதுமக்கள் பங்கேற்றனர்.

