/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
போராடி மீட்ட காட்டெருமை உயிரிழப்பு: விசாரணை
/
போராடி மீட்ட காட்டெருமை உயிரிழப்பு: விசாரணை
ADDED : ஜன 05, 2024 11:41 PM
குன்னுார்;குன்னுார் ஹேர்வுட் குடியிருப்பு 'செப்டிக் டேங்கில்' விழுந்த காட்டெருமையை, 9 மணி நேரம் போராடி உயிருடன் மீட்ட பிறகு பரிதாபமாக உயிரிழந்தது.
குன்னுார் அரசு ஊழியர்களின் குடியிருப்பு பகுதியான ஹேர்வுட் குடியிருப்பு பகுதியில் செப்டிக் டேங்கில் நேற்று முன்தினம் மாலை, 5 மணியளவில் காட்டெருமை தவறி விழுந்தது.
குன்னுார் வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்க முயன்றும், காட்டெருமையால் வெளியேற முடியாமல் சிரமப்பட்டது.
தொடர்ந்து, வனத்துறையின் வாகனத்தில் கயிறு கட்டி இழுத்து, நேற்று அதிகாலை, 2:00 மணியளவில் காட்டெருமை வெளியே கொண்டுவரப்பட்டது.
கடும் பனிமூட்டம் மற்றும் சாரல் மழையிலும், 9 மணி நேரமாக போராடி உயிருடன் மீட்ட போதும் சிறிது நேரத்தில் உயிரிழந்தது.
கால்நடை டாக்டர் பார்த்தசாரதி தலைமையில், பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதே இடத்தில் புதைக்கப்பட்டது. 15 வயதுடைய காட்டெருமை உடல் நிலை பாதித்ததாலும், வயது முதிர்வு காரணமாகவும் இறந்ததாக வனத்துறையினர் கூறினர். விசாரணையும் நடந்து வருகிறது.
மக்கள் கூறுகையில், 'காட்டெருமையை மீட்பு நடவடிக்கைக்காக நகராட்சியின் சார்பில் பொக்லின் வரவழைக்கப்பட்டது. பொக்லின் கொண்டு வந்த நகராட்சி ஊழியர்கள். காட்டெருமை விழுந்த இடத்திற்கு கொண்டு செல்லமுடியாது; பள்ளத்தில் கவிழ்ந்து விடும் எனவும் தெரிவித்து திரும்பி சென்றனர். முன்னதாகவே, பொக்லின் மூலம் உடனடியாக வழி ஏற்படுத்தி மீட்டிருந்தால் உயிருடன் காப்பாற்றி இருக்கலாம்,'என்றனர்.