/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காட்டு யானை தாக்கியதில் பெண் தொழிலாளி பலி; தெங்குமரஹாடா அருகே சாலை மறியலால் பரபரப்பு
/
காட்டு யானை தாக்கியதில் பெண் தொழிலாளி பலி; தெங்குமரஹாடா அருகே சாலை மறியலால் பரபரப்பு
காட்டு யானை தாக்கியதில் பெண் தொழிலாளி பலி; தெங்குமரஹாடா அருகே சாலை மறியலால் பரபரப்பு
காட்டு யானை தாக்கியதில் பெண் தொழிலாளி பலி; தெங்குமரஹாடா அருகே சாலை மறியலால் பரபரப்பு
ADDED : டிச 24, 2024 07:37 AM

கோத்தகிரி; கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தெங்குமரஹாடா கல்லாம்பாளையத்தில் காட்டு யானை தாக்கியதில் பெண் தொழிலாளி பலியானார்; சாலையில் உடலை வைத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் தேனாடு ஊராட்சி, கீழ் கட்டபெட்டு பகுதியை சேர்ந்தவர் லட்சுமி,62. கணவர் இறந்துவிட்ட நிலையில் இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர், நேற்று முன்தினம், தெங்குமரஹடார கல்லம்பாளையத்தில் வசிக்கும் தனது தங்கை வீட்டிற்கு சென்றுள்ளார். இரவு, 8:00 மணியளவில் தங்கை வீட்டிற்கு நடந்து செல்லும்போது, தென்னந்தோப்பில் இருந்த காட்டு யானை, திடீரென வெளியேறி அவரை தாக்கியுள்ளது.
சாலை மறியல் போராட்டம்
தலை மற்றும் உடல் பகுதியில் காயம் அடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே பலியானார். 'இப்பகுதியில், பாலம் இல்லாததால் வனப்பகுதியை கடந்து வயல் வழியாக நடந்து சென்றதால் தான் உயிரிழப்பு நேரிட்டது,' என கூறி, உறவினர்கள் மற்றும் பொது மக்கள் உடலை, கல்லாம்பாளையம் சாலையில் வைத்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சோலுார் மட்டம் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., சந்திரன், தெங்குமரஹாடா ரேஞ்சர் தீனதயாளன் மற்றும் ஊராட்சி தலைவர் சுகுணா மனோகரன் ஆகியோர் அங்கு சென்று, பேச்சுவார்த்தை நடத்தி மக்களை சமாதானப்படுத்தினர். தொடர்ந்து, உடலை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின், உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இப்பகுதி மக்கள் கூறுகையில், 'கல்லம்பாளையம் பகுதியில், ஆற்றை கடந்து செல்ல பாலம் வசதி இல்லாததால் வனப்பகுதியில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
ஒரு வாகனம் செல்லும் அளவுக்கு, 100 மீட்டர் துாரத்துக்கு பாலம் அமைத்திருந்தால், ஊருக்குள் வாகன வசதி கிடைக்கும். இது போன்ற உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது. பாலம் கட்ட நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை ஏற்று, போராட்டத்தை கைவிட்டோம்,' என்றனர்.