/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மணப்புள்ளி பகவதி அம்மன் கோவிலில் 27ல் திருவிழா
/
மணப்புள்ளி பகவதி அம்மன் கோவிலில் 27ல் திருவிழா
ADDED : பிப் 13, 2025 09:22 PM
பாலக்காடு, ; பாலக்காடு அருகேயுள்ள, மணப்புள்ளி பகவதி அம்மன் கோவில் திருவிழா வரும், 27ம் தேதி நடக்கிறது.
கேரள மாநிலம், பாலக்காடு நகரில் உள்ளது பிரசித்தி பெற்ற மணப்புள்ளி பகவதி அம்மன் கோவில். இங்கு ஆண்டுதோறும் மாசி மாதம் திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு திருவிழா வரும் 27ம் தேதி நடக்கிறது.
திருவிழாவை முன்னிட்டு, நாளை மாலை, 6:30 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. வரும் 26ம் தேதி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் கோவில் அருகே உள்ள கலையரங்கில் நடக்கிறது.
திருவிழா நாளான, 27ம் தேதி காலை பரிவார பூஜைக்கு பின், செண்டை மேளம் முழங்க யானைகள் அணிவகுப்புடன் 'காழ்ச்சீவேலி' நடக்கிறது. காலை, 10:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானமும், 11:30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து சுவாமியின் வாள், பீடம் எழுந்தருளும் வைபவம் நடக்கிறது.
அன்று, மாலை, 5:00 மணிக்கு கோட்டை மைதானத்தில் செண்டை மேளம் முழங்க, 15 யானைகள் அணிவகுத்து முத்துமணி குடைகள் மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. 28ம் தேதி காலை 7:30 மணிக்கு மூலஸ்தானத்துக்கு, அம்மனின் வாளும், பீடமும் திரும்பி எழுந்தருளுவதோடு விழா நிறைவடைகிறது.
திருவிழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக குழு தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் மணிகண்டன், பொருளாளர் மனோஜ்குமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.