ADDED : ஏப் 22, 2026 05:12 AM
நீலகிரியில், 'ஊட்டி, குன்னுார், கூடலுார் ஆகிய மூன்று தொகுதிகளில், தி.மு.க., -அ.தி.மு.க., -காங்.,- த.வெ.க.,- நா.த.க., மற்று சுயேட்சைகள்,' என, 18 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
கடந்த இரு வாரங்களாக கட்சியினர் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர். நேற்று இறுதி கட்ட பிரசாரம் என்பதால் நண்பகல், 12:00 மணிக்கு, ஊட்டியில், காங், கட்சியினர் சேரிங்கிராசிலிருந்து இறுதிக்கட்ட பிரசாரத்தை துவக்கி கமர்சியல் சாலை வழியாக ஐந்துலாந்தர் வந்தடைந்தனர்.
அங்கு காங்., வேட்பாளர் ராமச்சந்திரன், எம்.பி., ராஜா, காங்., மாவட்ட தலைவர் நாகராஜ் ஆகியோர் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து பேசினர். தொடர்ந்து பிரசார ஊர்வலம் ஊட்டி மத்திய பஸ் ஸ்டாண்டில் நிறைவடைந்தது.
* குன்னுார் தொகுதி வேட்பாளர் ராஜுவை ஆதரித்து, லாலி மருத்துவமனை பகுதியில் இருந்து கூட்டணி கட்சியினருடன் துவங்கிய ஊர்வலம், வி. பி., தெருவில் நிறைவுபெற்றது. அதில், வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து, எம்.பி., ராஜா பங்கேற்று பேசினார்.
* கூடலுார் (தனி) தொகுதியில் தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில் மூன்றாவது முறையாக, போட்டியிடும் வேட்பாளர் திராவிடமணி, நேற்று காலை முதல் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். கூவமூலா பழங்குடியின கிராமம், தேவாலா ஹட்டி, வாழவயல், அத்திமாநகர், அத்திக்குன்னா, உப்பட்டி, நெல்லியாளம், தொண்டியாளம், பந்தலுார் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார். கூடலுாரில் நிறைவு செய்தார்.
அ.தி.மு.க.,- பா.ஜ., இறுதிகட்ட பிரசாரம்: ஊட்டி சேரிங்கிராசிலிருந்து பா.ஜ., மற்றும் அ.தி.மு.க., கூட்டணி கட்சியினர், பிரசார ஊர்வலத்தை துவங்கினர். வேட்பாளர் போஜராஜன், அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் வினோத், பா.ஜ., மாவட்டத் தலைவர் தருமன் மற்றும் கூட்டணி கட்சியினர் கமர்சியல் சாலை வழியாக ஓட்டு சேகரித்து ஏ.டி.சி., வந்து, மக்களிடம் ஓட்டு சேகரித்து பிரசாரம் செய்தனர். அதில், பா.ஜ. மாநில செயலாளர் அஸ்வத்தாமன் பேசினார். அதன்பின் மாலை பிரசாரம் நிறைவு செய்யப்பட்டது.
இதேபோல, குன்னுார், கோத்தகிரியில் அ.தி.மு.க., வேட்பாளர் சாந்திராமு; கூடலுார் அ.தி.மு.க., வேட்பாளர் பொன்ஜெயசீலன் பந்தலுார், கூடலுார் பகுதிகளில் ஊர்வலமாக வந்து, வாக்காளர்களிடம் ஓட்டு சேகரித்தனர்.
மேலும், மூன்று தொகுதிகளிலும் த.வெ.க., மற்றும் நாம் தமிழர் வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
-நிருபர் குழு-:
