/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊருக்குள் வரும் யானைகளை தடுக்க தீ மூட்டி கண்காணிப்பு பணி தீவிரம்
/
ஊருக்குள் வரும் யானைகளை தடுக்க தீ மூட்டி கண்காணிப்பு பணி தீவிரம்
ஊருக்குள் வரும் யானைகளை தடுக்க தீ மூட்டி கண்காணிப்பு பணி தீவிரம்
ஊருக்குள் வரும் யானைகளை தடுக்க தீ மூட்டி கண்காணிப்பு பணி தீவிரம்
ADDED : ஏப் 17, 2025 09:27 PM

கூடலுார், ; கூடலுார் தொரப்பள்ளி குணில் பகுதிக்குள் காட்டு யானைகள் நுழைவதை தடுக்க, வனத்துறையினர் இரவில் தீ மூட்டி கண்காணித்து வருகின்றனர்.
முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து, கூடலுார் தொரப்பள்ளி பகுதிக்கு காட்டு யானைகள் நுழைவதை தடுக்க, வனத்தை ஒட்டி அகழி அமைத்துள்ளனர். அகழி பராமரிப்பின்றி கிடந்ததால், காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தது. கடந்த ஆண்டு வனத்துறை சார்பில் அகழி சீரமைத்து, காட்டு யானைகள் நுழைவதை தடுத்தனர்.
இந்நிலையில், சில காட்டு யானைகள், கடந்த ஒரு வாரமாக இரவில் குணில் பகுதியில் நுழைந்து, மீண்டும் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. வனத்துறையினர் விரட்டினாலும், அதன் வருகையை தடுக்க முடியவில்லை. இதனால், யானைகள் குடியிருப்புக்குள் நுழையும் பகுதிகளில், வன ஊழியர்கள் நேற்று, இரவு தீ மூட்டி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
எனினும், மற்றொரு வழியில் இரண்டு காட்டு யானைகள் குணில் பகுதியில் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி சென்றன.
மீண்டும் நேற்று மதியம், 12:30 மணிக்கு, யானைகள் திடீரென விவசாய தோட்டத்தில் நுழைந்தன. கிராம மக்கள் உதவியுடன் வன ஊழியர்கள் அதனை வனப்பகுதிக்குள் விரட்டினர். தொடர்ந்து, கண்காணித்து வருகின்றனர்.
மக்கள் கூறுகையில், 'இப்பகுதிக்கு இரவில் நுழையும் காட்டு யானைகள், விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால், ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்ய அரசு இழப்பீடு வழங்க வேண்டும்,' என்றனர்.

