/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முதுமலை மசினகுடி அருகே மூங்கில் காட்டில் பரவிய தீ
/
முதுமலை மசினகுடி அருகே மூங்கில் காட்டில் பரவிய தீ
ADDED : மார் 31, 2025 07:34 AM

கூடலுார்; முதுமலை மசினகுடி அருகே, மூங்கில் காட்டில் ஏற்பட்ட வனத்தீயால் வனப்பகுதி சேதமானது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் முதுமலை மசினகுடி, கூடலுார் கோட்டங்கள் வன உயிரினங்களின் முக்கிய வாழ்விடமாக உள்ளன.
இப்பகுதியில் தொடரும் வறட்சியால் விலங்குகளுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மசினகுடி கோட்டம், சிங்கார வனச்சரகம், ஆச்சக்கரை பகுதியில் நேற்று காலை, 11:30 மணிக்கு, மூங்கில் காட்டில் வனத்தீ ஏற்பட்டது. வனச்சரகர்கள் தனபால், பாலாஜி மற்றும் வன ஊழியர்கள் வனத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
காற்றின் காரணமாக தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. தொடர்ந்து கூடலுார் தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வனத்துறையினருடன் இணைந்து போராடி நேற்று மாலை, 6:00 மணிக்கு தீயை கட்டுப்படுத்தினர்.
வனத்துறையினர் கூறுகையில், 'இப்பகுதியில், மின் துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள மூங்கில் காட்டில் ஏற்பட்ட வனத்தீ அதனை ஒட்டிய வனப்பகுதிக்கும் பரவியது. தீயணைப்பு துறையினர் உதவியுடன் தீயை கட்டுப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. எவ்வளவு பரப்பில் பாதிப்பு ஏற்பட்டது என்பது தெரியவில்லை.
தீ எதனால் பரவியது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளோம்,' என்றனர்.