/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரியில் ஒளிராத மின்மினி பூச்சிகள்; குரும்பா பழங்குடியினரின் பெயர்சூட்டி ஆராய்ச்சி
/
நீலகிரியில் ஒளிராத மின்மினி பூச்சிகள்; குரும்பா பழங்குடியினரின் பெயர்சூட்டி ஆராய்ச்சி
நீலகிரியில் ஒளிராத மின்மினி பூச்சிகள்; குரும்பா பழங்குடியினரின் பெயர்சூட்டி ஆராய்ச்சி
நீலகிரியில் ஒளிராத மின்மினி பூச்சிகள்; குரும்பா பழங்குடியினரின் பெயர்சூட்டி ஆராய்ச்சி
ADDED : அக் 10, 2025 07:15 AM

குன்னுார்; நீலகிரி மாவட்டத்தில் ஒளிராத இரு மின்மினி பூச்சிகள் கண்டறியப்பட்டு, ஒரு மின்மினி பூச்சிக்கு குரும்பா பழங்குடியினரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் பல்லுயிர் குறித்த ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், அர்னோப் சக்ரோவர்டி, மொய்னுதீன், பனானி பட்டாச்சார்ஜி, அபினேஷ், சாம்சன், சாதிக் ஆகியோர் அடங்கி ஆராய்ச்சி குழுவினர், குன்னுார் மலையடிவார பகுதிகளில், ஒளிராத இரு வகையான, மின்மினி பூச்சிகளை கண்டறிந்து, ஆய்வு செய்து, சர்வதேச வெப்பமண்டல பூச்சி அறிவியல்இதழில் (ஸ்பிரிங்கர் -நேச்சர்) வெளியிட்டுள்ளனர்.
அதில், நீலகிரியின் பழமையான குரும்பா பழங்குடியினரின் பாரம்பரியத்தை அங்கீகரித்து பெருமைபடுத்தும் விதமாக, ஒரு மின்மினி பூச்சிக்கு,'லாமெல்லிபால்போட்ஸ் குரும்பா' எனவும், மற்றொரு வகைக்கு, மேற்கு வங்கம் கொல்கத்தாவை சேர்ந்த அர்னாப் சக்ரோவர்டி மற்றும் பனானி பட்டாச்சார்ஜி ஆகியோரின் பெற்றோரின் நினைவாக, அவர்களின் பெயர்களில் உள்ள சில எழுத்துக்களை கொண்டு, 'லாமெல்லிபால்போட்ஸ் டெப்பிரசாமா' எனவும் பெயரிட்டுள்ளனர்.
அழிந்து வரும் மின்மினி பூச்சிகள் நீலகிரி சேர்ந்த ஆராய்ச்சியாளர் மொய்னுதீன் கூறுகையில், ''மின்மினி பூச்சிகள் பொதுவாக ஈர நிலங்கள் மற்றும் புல்வெளிகளின் அருகில் உள்ள பகுதிகளில் வாழ்கின்றன. மேற்கு தொடர்ச்சி மலைகளில் இவை தற்போது அழிந்து வருகின்றன. அதிகப்படியான பூச்சிக்கொல்லி பயன்பாடு இவைகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.
அதில், ஒளிராத மின்மினி பூச்சிகளின் சூழலியல் குறித்து மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவது முக்கியம். 'ஐபார்நேச்சர், இயற்கை கிளப்' ஆய்வகம், வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை, கல்யாணி பல்கலைக்கழகம், பம்பாய் இயற்கை வரலாற்று சங்கம், மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சிகளுடன் இந்த ஆய்வு நடத்தப்பட்டது,'' என்றார்.
ஆராய்ச்சியில், நீலகிரியின் பழமையான குரும்பா பழங்குடியினரை வெளிப்படுத்த காரணமாக இருந்த, குன்னுாரை சேர்ந்த ஆசாத் என்பவருக்கு குழுவினர் பாராட்டு தெரிவித்தனர்.