/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பழைய இரும்பு வியாபாரியிடம் ரூ.10 லட்சம் திருடிய ஐவர் கைது
/
பழைய இரும்பு வியாபாரியிடம் ரூ.10 லட்சம் திருடிய ஐவர் கைது
பழைய இரும்பு வியாபாரியிடம் ரூ.10 லட்சம் திருடிய ஐவர் கைது
பழைய இரும்பு வியாபாரியிடம் ரூ.10 லட்சம் திருடிய ஐவர் கைது
ADDED : பிப் 06, 2024 12:21 AM
சூலுார்:சூலுார் அருகே பழைய இரும்பு வியாபாரியிடம், ரூ.10 லட்சம் திருடிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மசக்காளிபாளையத்தை சேர்ந்தவர் முகுந்தன்,41. பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகின்றார். இவருக்கு தெரிந்த சம்பத் என்ற புரோக்கர், தென்னம்பாளையத்தில் உள்ள ஒரு மில்லில், ரூ. 4 கோடி மதிப்புள்ள பழைய இரும்பு பொருட்கள் உள்ளதாகவும், அதற்கு முன்பணமாக, 10 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
அதை நம்பி, கடந்த 29ம் தேதி முகுந்தன், ரூ.10 லட்சத்துடன் காரில் தென்னம்பாளையம் வந்துள்ளார். அவருடன் சம்பத், கோவிந்தராஜ் இணைந்து கொண்டனர். அங்கு வந்த முருகேசன் என்ற நபர், முகுந்தனை மட்டும் பைக்கில் ஏற்றி கொண்டு, அன்னுார் ரோட்டில் சென்றார். சிறிது துாரம் சென்றவுடன், அங்கு நின்றிருந்த ஒருவர், ஒரு பார்சலை முருகேசனிடம் கொடுத்துள்ளார். அதை வண்டியின் பின்புறம் அமர்ந்திருந்த முகுந்தனிடம் கொடுத்துள்ளார்.
சிறிது தூரம் சென்றவுடன், கைப்பையும், பார்சலையும் வாங்கி, வண்டி டேங்க் கவரில் வைத்துக்கொண்ட முருகேசன், வழியில் முகுந்தனை இறக்கிவிட்டு விட்டு, ஆட்களுக்கு சம்பளம் கொடுத்து விட்டு வருகிறேன் எனக்கூறி தலைமறைவானார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முகுந்தன், சூலுார் போலீசாரிடம் புகார் அளித்தார்.
இன்ஸ்பெக்டர் மாதையன் உத்தரவின் பேரில், எஸ்.ஐ., ராஜேந்திர பிரசாத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி நடந்தது. அதில் வழக்கின் முக்கிய குற்றவாளிகளான வழியாம்பாளையத்தை சேர்ந்த கணேசன், 36, சேலத்தை சேர்ந்த ஜெயசீலன், 44, கோவையை சேர்ந்த சுஜித், 29, சவுரிபாளையத்தை சேர்ந்த ஜெயராஜ், 29, முருகேசன், 31 ஆகிய ஐந்து பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 10 லட்சம் ரூபாய் மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது.