/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'பறக்கும்' டிப்பர் லாரிகள்; அச்சத்தில் பொதுமக்கள்
/
'பறக்கும்' டிப்பர் லாரிகள்; அச்சத்தில் பொதுமக்கள்
ADDED : டிச 15, 2024 11:18 PM

பந்தலுார்; கேரளாவில் இருந்து வரும் டிப்பர் லாரிகள், பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில், அதிவேகத்தில் செல்வதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில் கட்டுமான பணிகள் மற்றும் சாலை சீரமைப்பு பணிகளுக்கு, தேவையான ஜல்லி கற்கள் மற்றும் பாறைதுகள் கேரளா மாநிலத்திலிருந்து கொண்டு வரப்படுகிறது. இதற்காக கேரளா மாநிலத்தை சேர்ந்த, 50-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் நாள்தோறும், பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளுக்கு வந்து செல்கிறது.
இந்த பகுதியில் சாலைகள் மிகவும் குறுகலாக உள்ளதுடன், அதிகளவு வளைவுகளையும் உள்ளடக்கி உள்ளது. ஆனால், டிப்பர் லாரி டிரைவர்கள் வாகனத்தை அதிவேகத்தில் இயக்கி வருகின்றனர்.
கேரள மாநிலத்தில் காலை, 10:00 மணி வரை மற்றும் மாலை 4:00 முதல் 6:00 மணி வரை டிப்பர் லாரிகள் இயக்குவதற்கு, தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் இந்த விதிமுறை கடைபிடிக்கப்படாத நிலையில், காலை முதலே டிப்பர் லாரிகள் வந்து செல்கிறது. மிகவும் குறுகலான சாலையில், ஒன்றாக பத்துக்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் வரும் நிலையில், எதிரே வரும் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் செல்ல முடியாமல் சிரமப்படும் நிலை தொடர்கிறது.
அத்துடன் பள்ளி செல்லும் மாணவர்கள் சாலையில் நடந்து செல்லும் போது, சற்று நிலை தடுமாறினாலும், வேகத்தில் வரும் லாரிகளில் சிக்கும் அபாயம் உள்ளது.
மக்கள் கூறுகையில், 'தேவாலா போலீசார், காலை, 9:00 மணி வரை, நாடுகாணி சோதனை சாவடி அருகே டிப்பர் லாரிகளை நிறுத்தி வைத்து, பின்னர் இயக்குவதற்கு அனுமதி அளிப்பதாக கூறும் நிலையில் இதனை, 10-:00 மணியாக மாற்ற வேண்டும். மாலை நேரத்திலும் பள்ளி நேரங்களில் வாகனங்களை இயக்க அனுமதி வழங்க கூடாது. லாரிகளை அதிவேகமாக இயக்கும் நபர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்,' என்றனர்.