UPDATED : அக் 29, 2026 10:51 PM
ADDED : அக் 29, 2026 10:46 PM
கோத்தகிரி:
கோத்தகிரியில் உணவில் கலப்படம் செய்த, இரண்டு கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், ஓட்டல்கள் மற்றும் இனிப்பு தயாரிக்கும் பேக்கரிகள், ஸ்வீட் கடைகளில் கலப்படம் நடக்க வாய்ப்பு உள்ளது. இதனை தடுக்கும் வகையில், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பிரபாவதி தலைமையில், தாலூகா உணவு பாதுகாப்பு அலுவலர் குமரகுருபரன் உள்ளிட்ட அலுவலர்கள் கோத்தகிரி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று திடீர் ஆய்வு செய்தனர்.
அதில், கோத்தகிரி எஸ். கைக் காட்டி பகுதியில், ஆய்வு செய்தபோது, இரண்டு கடைகளில் தரமற்ற முறையில், உணவு பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து வந்தது உறுதி செய்யப்பட்டது.
காவல் நிலையத்தில் புகார் செய்த, உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள், இரண்டு கடைகளுக்கு 'சீல்' வைத்ததுடன், கடை உரிமையாளர்களுக்கு, தலா, 5,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
