/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேயிலை தோட்டத்தில் யானை பலி வனத்துறையினர் விசாரணை
/
தேயிலை தோட்டத்தில் யானை பலி வனத்துறையினர் விசாரணை
ADDED : ஜன 18, 2024 01:16 AM

கூடலுார : கூடலுார் தேவர்சோலை அருகே, தனியார் தேயிலை தோட்டத்தில், மர்மமான முறையில் காட்டு யானை இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம், கூடலுார் தேவர்சோலை உட்பிரேயர் அருகே, தனியார் எஸ்டேட் பகுதியில், காட்டு யானை இறந்து கிடப்பதை நேற்று முன்தினம் மாலை, எஸ்டேட் ஊழியர்கள் பார்த்துள்ளனர்.
இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வன ஊழியர்கள் அதன் உடலை ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
கூடலுார் வன அலுவலர் கொம்மு ஓம்காரம், வனச்சரகர் ராதாகிருஷ்ணன் மற்றும் வன ஊழியர்கள் நேற்று அதன் உடலை ஆய்வு செய்தனர். வன அதிகாரிகள் மற்றும் தேவர்சோலை பேரூராட்சித் தலைவர் வள்ளி, கிராம நிர்வாக அலுவலர் பார்வதி முன்னிலையில், முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார், நெலக்கோட்டை அரசு கால்நடை டாக்டர் காவண்யா அதன் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'இறந்த பெண் யானைக்கு 8 வயது இருக்கும்.
இதன் உடலில் உள் காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளது. ஆய்வக பரிசோதனைக்காக அதன் உடல் பாகங்கள் எடுக்கப்பட்டுள்ளது.
அதன் முடிவு கிடைத்த பின்பு இறந்ததற்கான காரணம் தெரியவரும்,' என்றனர்.