/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மரங்கள் வெட்டி கடத்தல்; வனத்துறை விசாரணை
/
மரங்கள் வெட்டி கடத்தல்; வனத்துறை விசாரணை
ADDED : ஆக 21, 2025 08:04 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே எருமாடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மரக்கடத்தல் மற்றும் மண் கடத்தல் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதுகுறித்து வருவாய் துறைக்கு அவ்வப்போது புகார்கள் சென்றபோதும், கண்டு கொள்ளாத நிலையில் மாநில எல்லை பகுதியான இங்கு, அத்துமீறல்கள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், எருமாடு அருகே தமிழக எல்லை சோதனை சாவடியான கோட்டூர் பகுதியில் தனியார் பட்டா நிலத்தில் மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக புகார் எழுந்தது. தொடர்ந்து சேரம்பாடி வனத்துறையினர், அப்பகுதி யில் ஆய்வு செய்தபோது, மத்தாய் என்பவருக்கு சொந்தமான பட்டா நிலத்தில், பலா மற்றும் சில்வர் ஓக் மரங்களை, எந்தவித அனுமதியும் இல்லாமல் மரக்கடத்தல் கும்பல் வெட்டி கேரளாவிற்கு கடத்தி சென்றதாக தெரிய வந்தது.
மேலும், கடத்தி செல்வதற்கு ஏதுவாக பலாமரங்கள் வெட்டி அதே பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது. தமிழக எல்லை பகுதியான எருமாடு மற்றும் இதன் சுற்று வட்டார பகுதிகளில் மண் மற்றும் மரக்கடத்தல் குறித்து இப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்த போதும், மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் கண்டு கொள்வதில்லை. இதனால், நாளுக்கு நாள் மரக்கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
பொது மக்கள் கூறுகையில், 'மாநில எல்லையில் நடக்கும் அத்துமீறல்கள், கடத்தல் குறித்து விசாரணை நடத்த, மாவட்ட நிர்வாகம் தனியாக ஒரு குழுவை நியக்க வேண்டும். விதிமீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
கூடலுார் ஆர்.டி.ஓ., குணசேகரன் கூறுகையில், ''மரக்கடத்தல் குறித்து தாசில்தார் மூலம் உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.