/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முதுமலையில் பாறு கழுகுகள் எண்ணிக்கை அதிகரிப்பு வனத்துறையினர் மகிழ்ச்சி
/
முதுமலையில் பாறு கழுகுகள் எண்ணிக்கை அதிகரிப்பு வனத்துறையினர் மகிழ்ச்சி
முதுமலையில் பாறு கழுகுகள் எண்ணிக்கை அதிகரிப்பு வனத்துறையினர் மகிழ்ச்சி
முதுமலையில் பாறு கழுகுகள் எண்ணிக்கை அதிகரிப்பு வனத்துறையினர் மகிழ்ச்சி
ADDED : ஏப் 08, 2025 09:34 PM

கூடலுார் ;முதுமலையில் நடந்த கணக்கெடுப்பில் பாறு கழுகுகள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால் வனத்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
'வனத்தின் துாய்மை பணியாளர்' என்று அழைக்கப்படும் பாறு கழுகுகள் பெருமளவில் அழிந்து விட்டன. தற்போது, நம் மாநிலத்தில், முதுமலை, மசினகுடி, மாயாறு பள்ளத்தாக்கு, அதனை ஒட்டிய சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், நெல்லை வனப்பகுதிகளில் காணப்படுகிறது.
மேலும், கர்நாடக மாநிலம் பந்திப்பூர், நாகர்ஹோலோ, பி.ஆர்.டி.,புலிகள் காப்பகங்கள் மற்றும் கேரளா வயநாடு பகுதிகளில் மிக குறைந்த எண்ணிக்கையில் காணப்படுகிறது.
இதனை பாதுகாக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த, 2023 முதல் இவைகள் எண்ணிக்கை குறித்து அறிய, ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு பணிகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான, கணக்கெடுப்பு பணிகள் பிப்., 27, 28 தேதிகளில் நடந்தது. இதன் முடிவுகளை, வனத்துறையினர் கடந்த வாரம் வெளியிட்டனர்.
அதன்படி தமிழகத்தில் அதிகபட்சமாக, முதுமலையில், 119 பாறு கழுக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது
மேலும், மாயாறு பகுதியில் கழுகுகள் அதிகம் கூடுகள் கட்டிய, நீர் மருது மரங்கள் குறித்து ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
முதுமலை துணை இயக்குனர் வித்யா கூறுகையில், ''முதுமலையில் பாறு கழுகுகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இவைகள் எண்ணிக்கை மேலும், அதிகரிக்க தொடர்ந்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
கழுகுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தி வரும் தடை செய்யப்பட்ட மருந்துகளை கால்நடைக்கு பயன்படுத்துவதை தவிர்க்க தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மாயாறு பகுதியில் இவைகள் அதிகம் கூடுகள் கட்டிய, நீர்மருது மரங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறோம்,'' என்றார்.