/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
யானைகளை கண்காணிக்கும் பணியில் வனத்துறை
/
யானைகளை கண்காணிக்கும் பணியில் வனத்துறை
ADDED : மே 07, 2025 01:54 AM

பந்தலுார்: பந்தலுார் அருகே நெலாக்கோட்டை பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளை, 'ட்ரோன்' கேமரா உதவியுடன் கண்காணித்து விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.
பந்தலுார் அருகே நெலாக்கோட்டை பஜார் பகுதி, கூடலுார் -- வயநாடு சாலையில் அமைந்துள்ளது. சாலையின் ஒரு பகுதியில் முதுமலை புலிகள் காப்பக எல்லை மற்றும் அதனை ஒட்டி நெலாக்கோட்டை, விலங்கூர், சோலாடி, 9-வது மைல் உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக ஒற்றை ஆண் யானை முகாமிட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதுடன், வாகனங்களையும் சேதப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை மேலும் இரண்டு ஆண் யானைகள் முகாமிட்டு உள்ளதுடன், ஒரு யானை வாகனத்தை சேதப்படுத்தி வீட்டை இடித்து உள்ளே புகுந்தது.
மக்கள் போராட்டத்தை தொடர்ந்து, உதவி வனப்பாதுகாவலர் அருள்மொழி வர்மன், வனச்சரகர் ரவி மேற்பார்வையில், வனக்குழுவினர் ட்ரோன் கேமரா உதவியுடன் கண்காணித்து, புலிகள் காப்பகத்திற்குள் துரத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

