/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தோட்டத்தில் முகாமிடும் காட்டு யானைகள் தடுக்க முடியாமல் வனத்துறை திணறல்
/
தோட்டத்தில் முகாமிடும் காட்டு யானைகள் தடுக்க முடியாமல் வனத்துறை திணறல்
தோட்டத்தில் முகாமிடும் காட்டு யானைகள் தடுக்க முடியாமல் வனத்துறை திணறல்
தோட்டத்தில் முகாமிடும் காட்டு யானைகள் தடுக்க முடியாமல் வனத்துறை திணறல்
ADDED : ஜூலை 11, 2025 11:11 PM

கூடலுார், ;கூடலுார் தொரப்பள்ளி பகுதியில் விவசாய தோட்டங்களை முற்றுகையிட்டு, மக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானைகளை நிரந்தரமாக விரட்ட முடியாமல் வனத்துறையினர் சிரமப்பட்டு வருகின்றனர்.
முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி கூடலுார் தொரப்பள்ளி, குணில், தேர்வயல், அல்லுார்வயல் கிராமங்கள் அமைந்துள்ளன.
முதுமலையிலிருந்து காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதை தடுக்க, முதுமலை வன எல்லையை ஒட்டி அகழி அமைக்கப்பட்டுள்ளது. சில காட்டு யானைகள் அகழியை சேதப்படுத்தி தொரப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிக்குள் நுழைவதை வாடிக்கையாக கொண்டுள்ளது.
நடப்பாண்டு, இரவு மட்டுமின்றி பகல் நேரங்களிலும் காட்டு யானைகள் கிராமங்களில் உள்ள விவசாய தோட்டங்களில் முகாமிட்டு பயிர்களை சேதப்படுத்தி மக்களையும் தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றன. வனத்துறையினர், 'நைட் விஷன் தெர்மல் கேமரா ட்ரோன்' பயன்படுத்தி யானைகளை விரட்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். எனினும், அவைகள் குடியிருப்புக்குள் நுழைவதை நிரந்தரமாக தடுக்க முடியவில்லை. யானைகள் சேதப்படுத்தும் விவசாய பயிர்களால் ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்ய முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
விவசாயிகள் கூறுகையில், 'வனத்துறையினர், காட்டு யானைகளை கண்காணித்து விரட்டினாலும், அவைகள் விவசாய தோட்டத்துக்குள் நுழைவதை நிரந்தரமாக தடுக்க முடியவில்லை. காட்டு யானைகள் தினமும் விவசாய பயிர்களை சேதப்படுத்தி நஷ்டத்தை ஏற்படுத்தி, மக்களையும் அச்சுறுத்தி வருகிறது.
இதேநிலை தொடர்வதால் மக்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. உயிர்சேதம் ஏற்படும் முன், வனத்துறையினர், கும்கி யானைகள் உதவியுடன், காட்டு யானைகளை முதுமலை வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை வேண்டும்,' என்றனர்.