யானைகள் நடமாட்டம் உள்ள பகுதி மக்களுக்கு...வனத்துறை எச்சரிக்கை!:நள்ளிரவில் வெளியே செல்வதை தவிர்க்க அறிவுரை
யானைகள் நடமாட்டம் உள்ள பகுதி மக்களுக்கு...வனத்துறை எச்சரிக்கை!:நள்ளிரவில் வெளியே செல்வதை தவிர்க்க அறிவுரை
UPDATED : ஜூலை 04, 2026 05:04 AM
ADDED : ஜூலை 03, 2026 06:43 PM

கூடலுார்: 'கூடலுாரில், யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் இரவு மற்றும் நள்ளிரவு நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
கூடலுார் வனகோட்டத்தில், பல இடங்களில் இரவில் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் காட்டு யானைகள், விவசாய பயிர்கள், வீடுகளை சேதப்படுத்துவதுடன், மனிதர்களையும் தாக்கி வருகின்றன. யானைகள் மற்றும் பிற விலங்குகள் தாக்கி கடந்த, 10 ஆண்டுகளில், 27 பலர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.
இதனை தவிர்க்க, வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும், நடப்பாண்டில் காட்டு யானை தாக்கி, ஒரு சிறுவன் ஒரு பெண் உட்பட, 6 பேர் உயிரிழந்துள்ளனர். இது போன்ற சம்பவங்களை தடுக்க, 140 வன ஊழியர்கள் இரவு, பகல் நேரங்களில் கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.
யானைகள் அதிக நடமாட்டம் உள்ள, கூடலுார், பந்தலுார் சுற்றுப்புற பகுதிகளில் வன ஊழியர்கள் வாகனங்களில் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். யானைகள் நடமாட்டம் குறித்து பொது மக்களுக்கு ஒலிபெருக்கில் எச்சரித்தும் வருகின்றனர். சில நேரங்களில் 'சைரன்' ஒலித்து யானைகளை விரட்டும் பணியும் நடந்து வருகிறது.
இந்நிலையில், ஆமைக்குளம், மரப்பாலம், ஓவேலி உள்ளிட் பல பகுதிகளில் இளைஞர்கள் பலர், இரவு நேரங்களில் தனியாக செல்வதை வனத்துறையினர் பார்த்து, அவர்களை எச்சரித்து, பாதுகாப்பாக வீட்டுகளுக்கு அனுப்பி வைத்தனர். சில மதுபிரியர்கள் போதையில் தாமதமாக செல்வதை வழங்கமாக கொண்டுள்ளனர். அவர்களையும் எச்சரித்து அனுப்பி வருகின்றனர். மேலும், வனவிலங்குகள் ஆபத்து உள்ள பகுதிகளில், இரவு நேரங்களில் தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்க வலியுறுத்தியுள்ளனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'காட்டு யானைகளால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். வன ஊழியர்கள் இரவு கண்விழித்து ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நள்ளிரவு நேரங்களில் யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில், உலா வரும் இளைஞர்கள் யானையிடம் சிக்கி அசம்பாவிதம் நடக்கும் ஆபத்து உள்ளது. இதனை தவிர்க்க வேண்டும். மேலும், தேவை இன்றி இரவில் வெளியில் உலா வரும் நபர்கள் குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இரவில், மருத்துவம் உட்பட அவசர நேரங்களில் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தால், வனத்துறை வாகனங்களில் மக்களை அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்படும்,' என்றனர்.
