ADDED : ஏப் 27, 2026 10:10 PM

ஊட்டி:நீலகிரியில், வனத்தீ அபாயத்தால் மின்வாரியம் கட்டுப்பாட்டில் உள்ள அணை, மின் நிலையங்களில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நீலகிரியில், குந்தா, பைக்காரா நீர் மின் திட்டத்தின் கீழ், குந்தா, கெத்தை, பரளி, பில்லுார், சிங்காரா, மாயார், காட்டு குப்பை, அவலாஞ்சி உள்ளிட்ட, 12 மின் நிலையங்கள், 13 அணைகள் அடர்ந்த வனப்பகுதிக்கு இடையே உள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக, நீலகிரி, கூடலுார் வனக்கோட்டங்களில் காட்டு தீ பரவல் காரணமாக, 1000 ஏக்கர் வனப்பரப்பு எரிந்து சாம்பலானது. காட்டு தீயால் வன உயிரினங்களும் பாதிக்கப்பட்டது. தீயை அணைக்க வனத்துறை போராடி வருகிறது. வனப்பகுதிக்கு இடையே அணை, மின்நிலையங்கள் செயல்படுவதால் காட்டு தீயால் பாதிப்பு நேரிடும் அபாயம் இருப்பதால் மின்வாரியம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது.
மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ' தமிழக மின்வாரிய தலைமை உத்தரவுப்படி, குந்தா, பைக்காரா நீர் மின் திட்டத்தின் கீழ் உள்ள அணை, மின் நிலையங்களை பாதுகாத்து கொள்ள கோடை காலம் முடியும் வரை அந்தந்த மின் வட்ட செயற் பொறியாளர்கள் தலைமையில், குறிப்பாக, மின்நிலையம் செயல்படும் பகுதிகளில், 24 மணி நேரம் கண்காணிப்பு பணியில் ஈடுபட அறிவுறுத்தியுள்ளோம்.'' என்றனர்
