/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இலவச மின் இணைப்புகள்: வேளாண் துறையினர் ஆய்வு
/
இலவச மின் இணைப்புகள்: வேளாண் துறையினர் ஆய்வு
ADDED : பிப் 16, 2024 11:34 PM
சூலுார்;விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச மின் இணைப்புகளின் உண்மைத்தன்மை குறித்து மாவட்டம் முழுக்க வேளாண் துறையினர் ஆய்வு செய்யும் பணியை துவக்கி உள்ளனர்.
தமிழகத்தில், விவசாயத்துக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம், 20 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் உள்ளது. மின் வாரியத்தினர் அவற்றை கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் இலவச மின் இணைப்பு பெற்றுள்ள விவசாயிகளின் விபரங்கள், மின் இணைப்பின் பயன்பாடு குறித்த உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேளாண் துறை இயக்குனர், வேளாண் இணை இயக்குனர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது:
மாநிலம் முழுவதும் விவசாய பணிகளுக்காக வழங்கப்பட்டுள்ள இலவச மின் இணைப்புகளை கள ஆய்வு செய்து, அங்கு உண்மையிலேயே விவசாய பணிகளுக்கு மட்டுமே அந்த மின்சாரம் பயன்படுத்தப்படுகிறதா அல்லது வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறதா என, உறுதி செய்யப்படும். மாவட்டம் முழுக்க உள்ள ஒன்றியங்களில் இப்பணியில் வேளாண் துறையினர், தோட்டக்கலைத்துறையினர், வேளாண் விற்பனை மற்றும் வணிக வரித்துறை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக கிராம அளவில் பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயி பெயர், மின் இணைப்பு எண், சாகுபடி பரப்பு மற்றும் பயிர் உள்ளிட்ட விபரங்களை திரட்டி ஒன்றியம் வாரியாக அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வேளாண் உதவி இயக்குனர்கள் இப்பணிகளை ஒருங்கிணைத்து அறிக்கை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சூலுார், சுல்தான்பேட்டை உள்ளிட்ட ஒன்றியங்களில் இப்பணி வேகமாக நடக்கிறது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.