/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் வாட்டி எடுக்குது உறைப்பனி; உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
/
ஊட்டியில் வாட்டி எடுக்குது உறைப்பனி; உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஊட்டியில் வாட்டி எடுக்குது உறைப்பனி; உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஊட்டியில் வாட்டி எடுக்குது உறைப்பனி; உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ADDED : ஜன 08, 2025 10:29 PM

ஊட்டி; ஊட்டியில் தொடரும் உறைப்பனியால் உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் டிச., மாதத்திலிருந்து ஜன., இறுதி வரை உறைப்பனி தாக்கம் இருக்கும். அதன்படி, கடந்த சில நாட்களாக அவ்வப்போது உறைப்பனி தென்பட்டு வருகிறது. கடும் குளிர் நிலவுகிறது. கடந்த இரண்டு நாட்களாக ஊட்டி உட்பட புறநகர் பகுதிகளில் உறைப்பனி தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், குறைந்தபட்ச வெப்பநிலை, 2 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலைக்கு சென்றது.
புறநகர் பகுதிகளான காந்தள், தலைகுந்தா, சாண்டினல்லா பகுதிகளில், ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தென்பட்டது. அதேபோல், அவலாஞ்சியில் மைனஸ்-1 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலைக்கு சென்றது.
பாதுகாப்பு நடவடிக்கை
உறைப்பனி தாக்கத்தால் செடி, கொடி மற்றும் புற்கள் காய்ந்து வறட்சியான காலநிலை நிலவுகிறது. கால்நடைகளுக்கு தீவன கட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, புறநகர் பகுதிகளிலும் தேயிலை விவசாயம் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உறைப்பனி தாக்கத்தால் தேயிலை செடிகள் கருகி மகசூல் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. தேயிலை தோட்டங்களை, 'கோத்த கிரி மலார்' செடிகளை கொண்டு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் பசுந்தேயிலை கொள்முதல் படிப்படியாக குறைய துவங்கியுள்ளது. இதனால், உறுப்பினர்களுக்கு நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், தேயிலையை கூட்டுறவு தொழிற்சாலைகளுக்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஊட்டி சுற்றுப்புற பகுதிகளில், மலை காய்கறி தோட்டத்தில் கேரட் அறுவடைக்கு தொழிலாளர்கள் செல்கின்றனர். வெம்மை ஆடைகளை அணிந்து உறைப்பனியிலும் பணி செய்து வருகின்றனர். மார்க்கெட் சுமை துாக்கும் தொழிலாளர்கள், கடைகளுக்கு வேலைக்கு வருபவர்கள் குளிரின் காரணமாக, ஆங்காங்கே தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். ஜன., இறுதி வரை உறைப்பனி தென்படும் சூழல் இருப்பதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.