/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மழை அதிகரித்ததால் தவிட்டு பழ சீசன்; சுற்றுலா பயணிகள் மத்தியில் கிராக்கி
/
மழை அதிகரித்ததால் தவிட்டு பழ சீசன்; சுற்றுலா பயணிகள் மத்தியில் கிராக்கி
மழை அதிகரித்ததால் தவிட்டு பழ சீசன்; சுற்றுலா பயணிகள் மத்தியில் கிராக்கி
மழை அதிகரித்ததால் தவிட்டு பழ சீசன்; சுற்றுலா பயணிகள் மத்தியில் கிராக்கி
ADDED : அக் 14, 2024 09:20 PM

குன்னுார் : குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தவிட்டுப்பழம் சீசன் தற்போது துவங்கியுள்ளது.
நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் மருத்துவ குணம் வாய்ந்த ஏராளமான மூலிகை செடிகள், தாவரங்கள் உள்ளன.அதில், 'ரோடோமிர்டஸ் டோமென்டோசா' தாவர வியல் பெயர் கொண்ட தவிட்டுபழ செடிகள் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் காணப்படுகின்றன. மருத்துவ குணம் வாய்ந்த இந்த பழத்துக்கு பொதுவாக ஏப்., முதல் ஜூன் மாதம் வரையில் சீசன் காலமாகும்.
இந்நிலையில் மழை அதிகரிப்பால், அக்., மாதத்தில் மீண்டும் சீசன் துவங்கியுள்ளது. குன்னுார் எடப்பள்ளி, ஊட்டி தொட்டபெட்டா உள்ளிட்ட சில இடங்களில் இந்த செடிகளில் மலர்கள் பூத்து, தவிட்டு காய்கள் காய்க்க துவங்கி உள்ளன.
நீலகிரி சுற்றுச்சூழல் மற்றும் சமூக அறக்கட்டளை நிறுவன (நெஸ்ட்) தலைவர் சிவதாஸ் கூறுகையில், ''நீலகிரியில் தற்போது மழையின் தாக்கம் அதிகரித்து வருவதால் வனவளத்திற்கு உகந்ததாக உள்ளது. குறிப்பாக, இந்த மழை காரணமாக தவிட்டு பழங்கள் பல இடங்களிலும் சீசன் துவங்கி உள்ளது. சீசன் நவ., வரை நீடிக்கும். இந்த பழங்களை நடைபாதைகளில் மட்டுமே சிலர் விற்பனை செய்து வருகின்றனர். இந்த பழம், நோய் எதிர்ப்பு சக்திக்கு சிறந்தது.
தற்போது இதன் மகத்துவம் குறித்து பலரும் அறிந்துள்ளதால், கிராக்கி அதிகரித்து கிலோ, 600 ரூபாய் வரை இருந்தாலும், ஒரு சிறிய படி, 25 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
தற்போது, சில பழங்குடியின கிராமங்கள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஆடுகள் அதிகம் வளர்ப்பவர்கள், இந்த செடிகளை அடியோடு வெட்டுவதால், இந்த பழம் அழிவின்பிடியில் உள்ளது.
வனத்துறை மற்றும் தோட்டக்கலை துறை இணைந்து இதனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

