/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காந்தி மைதான சர்ச்சை: ஆர்.டி.ஓ., தலைமையில் ஆய்வு
/
காந்தி மைதான சர்ச்சை: ஆர்.டி.ஓ., தலைமையில் ஆய்வு
ADDED : ஜன 28, 2025 10:17 PM

ஊட்டி; ஊட்டி அரசுப்பள்ளி காந்தி மைதானத்தில் பிரச்னை தொடர்பாக ஆர்.டி.ஓ., தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஊட்டி ஏ.டி.சி., பகுதியில், 2.5 ஏக்கர் பரப்பளவில் அரசுக்கு சொந்தமான காந்தி விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தை, ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களும், அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களும் பயன்படுத்தி வந்தனர்.
ஒரு கட்டத்தில் அந்த பள்ளி மைதான பராமரிப்பு பணிகளை தனியார் பள்ளி நிர்வாகம் மேற்கொள்ள திட்டமிட்டது. மேலும், அந்த மைதானத்தை பயன்படுத்த அனுமதிக்க வலியுறுத்தி, தனியார் பள்ளி சார்பில் சென்னை ஐகோர்ட்டில் கடந்த, 2021-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.
இதை விசாரித்த ஐகோர்ட், 'அரசு பள்ளிக்கு சொந்தமான மைதானத்தை, தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு எவ்வாறு வழங்க முடியும்,' என்று கேள்வி எழுப்பி அரசு பள்ளி மாணவர்கள் மட்டும் பயன்படுத்த உத்தரவிட்டது.மேலும்,மைதானத்தை சரியாக பராமரிக்கவும் அறிவுறுத்தியது. தற்போது. மைதானம் புதர் மண்டி காணப்படுகிறது.
மைதானத்தை மீண்டும் தனியார் பள்ளி பயன்படுத்த மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஊட்டி அரசு பள்ளி மைதான விவகாரம் தொடர்பாக, ஊட்டி ஆர்.டி.ஓ., சதீஷ்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நந்தகுமார், நகராட்சி அதிகாரிகள், நில அளவைத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நேற்று நேரடி ஆய்வு நடத்தினர்.
ஊட்டி ஆர்.டி.ஓ., சதீஷ்குமார் கூறுகையில், '' விளையாட்டு மைதானம் தொடர்பான பிரச்னைக்கு தீர்வு காண, மூன்று பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, மைதானத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. பள்ளி மைதானம் குறித்து மாவட்ட நிர்வாகம் அறிக்கை கேட்டுள்ளது.
அறிக்கை வழங்கப்பட்ட பின்பு இறுதி முடிவு எடுக்கப்படும்,'' என்றார்.

