சாலை ஓரத்தில் குப்பை:துர்நாற்றம் வீசுவதால் பாதிப்பு
சாலை ஓரத்தில் குப்பை:துர்நாற்றம் வீசுவதால் பாதிப்பு
ADDED : செப் 29, 2026 08:01 PM
பந்தலுார்: பந்தலுார் அருகே அய்யன்கொல்லி பஜாரில் சாலையை ஒட்டி, குப்பை கொட்டி வைப்பதால் கடும் துர்நாற்றம் வீசி சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது.
மாநில எல்லையில், பந்தலுார் அருகே அய்யன்கொல்லி பகுதிகள் அமைந்துள்ளன. இரு மாநில மக்கள் மற்றும் உள்ளூர் மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் இந்த பகுதியில், 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு குடியிருப்புகள் மற்றும் கடைகளில் இருந்து எடுக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு தனியாக இடமில்லை. இதனால், கடைகள் மற்றும் நுாலகம் அருகே சாலை ஓரத்தில், குப்பைகள் கொட்டி வைக்கப்படுகிறது.
‘இந்த பகுதியில் குப்பை கொட்ட கூடாது’ என, ஊராட்சி நிர்வாகம் அறிவிப்பு பலகை வைத்திருந்த போதும், மீண்டும் அதே பகுதியில் குப்பையை கொட்டி வருவதால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இவ்வழியாக செல்லும் மக்கள், மூக்கை பொத்தி கொண்டு செல்லும் அவலம் தொடர்கிறது. எனவே, இப்பகுதியில் குப்பை கொட்ட தனியிடம் தேர்வு செய்து, ஊராட்சி வாகனங்களில் எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
