/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரியில் ஆண்டு தோறும் பூண்டு உற்பத்தி... அதிகரித்தால் பயன்! இடைத்தரகர்கள் ஆதிக்கத்தை தடுத்தால் லாபம்
/
நீலகிரியில் ஆண்டு தோறும் பூண்டு உற்பத்தி... அதிகரித்தால் பயன்! இடைத்தரகர்கள் ஆதிக்கத்தை தடுத்தால் லாபம்
நீலகிரியில் ஆண்டு தோறும் பூண்டு உற்பத்தி... அதிகரித்தால் பயன்! இடைத்தரகர்கள் ஆதிக்கத்தை தடுத்தால் லாபம்
நீலகிரியில் ஆண்டு தோறும் பூண்டு உற்பத்தி... அதிகரித்தால் பயன்! இடைத்தரகர்கள் ஆதிக்கத்தை தடுத்தால் லாபம்
ADDED : ஜன 28, 2025 07:22 AM
ஊட்டி: நீலகிரி பூண்டுக்கு கிராக்கி இருப்பதால் இடைத்தரகர்கள் ஆதிக்கத்தை தடுத்து, உற்பத்தியை அதிகரிக்க தோட்டக்கலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலை காய்கறி விவசாயம் செய்யப்படுகிறது. உருளை கிழங்கு, கேரட், பீன்ஸ், முள்ளங்கி, பீட்ரூட், முட்டைகோஸ் உட்பட பல்வேறு காய்கறிகள் இங்கு பயிரிடப்படுகின்றன. அதே போல், சில விவசாயிகள் பூண்டு விவசாயத்திலும் ஈடுபடுகின்றனர்.
ஊட்டி, முத்தோரை பாலாடா, கொல்லிமலை ஓரநள்ளி, தேனாடுகம்பை உட்பட பல பகுதிகளில், ஆண்டுதோறும் ஏப்., முதல் ஜூன் வரை முதல் போகத்தில், 2,500 ஏக்கர்; அக்., முதல் டிச., வரை இரண்டாவது போகத்தில், 1,500 ஏக்கரில் பூண்டு பயிரிடப்படுகிறது.
நீலகிரி பூண்டு விதைக்கு வட மாநிலங்களில் கிராக்கி உள்ளது. மேட்டுப்பாளையம் மண்டிகளில் மும்பை, குஜராத், கர்நாடகா,கேரளா உள்ளிட்ட வெளி மாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்து பூண்டு வாங்கி செல்கின்றனர். ஊட்டியில் உற்பத்தி செய்யப்படும் பூண்டு, ஊட்டி மார்க்கெட், மேட்டுப்பாளையம் மண்டிகளில் ஏலம் விடப்படுகிறது.
இடைத்தரகர்கள் ஆதிக்கம்
மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பூண்டு முழுவதையும் இடைத்தரகர்கள் ஏலம் எடுக்கின்றனர். பின், அவர்களிடம் இருந்து வெளி மாவட்டம் , மாநில வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். இதனால், விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் கிடைக்கும் வருவாயை விட இடைத்தரகர்கள் அதிக லாபம் சம்பாதிப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
விவசாயிகள் கூறுகையில், 'அரசின் கொள்முதல் மையமான, நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்துக்கு (என்.சி.எம்.எஸ்) பூண்டு, காய்கறிகள் ஆகியவற்றை கொண்டு செல்ல விடாமல் சில இடைத்தரகர்கள் தடுப்பது வழக்கம். இதற்கு சில விவசாயிகள் முன்பணம் வாங்கி விடுகின்றனர்.
இதனால், மண்டிகள் வைத்துள்ள இடைத்தரகர்களிடம் கொடுக்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுகின்றனர். அவர்கள் நிர்ணயிக்கும் விலையைத்தான் பெற முடிகிறது. இடைத்தரகர்களிடமிருந்து நீலகிரி மாவட்ட விவசாயிகளை காக்க அரசு நடவடிக்கை எடுத்தால், சிறு விவசாயிகள் பயன்பெறுவர்,' என்றனர்.
உற்பத்தியை அதிகரிக்கணும்
நீலகிரி மாவட்ட காய்கறி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'ஆண்டுதோறும், நீலகிரியில் இருந்து மட்டும், 25 ஆயிரம் டன் அளவிலான பூண்டு மேட்டுப்பாளையத்துக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இவற்றை வட மாநில விவசாயிகள், வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். மேட்டுப்பாளையத்தில் உள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பல ஆண்டுகளாக பூண்டு விற்பனை நிறுத்தப்பட்டிருந்தது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சமீபத்தில் மீண்டும் பூண்டு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கமிஷன் தொகையாக, கிலோவுக்கு, 3 ரூபாய் மட்டுமே பெறப்படுகிறது. உடனுக்குடன் பண பட்டுவாடா செய்யப்படுவதால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர். பூண்டு உற்பத்தி அதிகரிக்க விவசாயிகளை அரசு ஊக்கப்படுத்த வேண்டும்,' என்றனர்.
தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிபிலா மேரி கூறுகையில், ''நீலகிரி மலை காய்கறி விவசாயிகள் மேம்பாட்டுக்கு மத்திய, மாநில அரசு திட்டங்கள் முழுமையாக பயன்படுகின்றன. அதில், நீலகிரி பூண்டு உற்பத்தியை அதிகரிக்க அரசின் மானிய உதவிகளை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும்,'' என்றார்.