லோயர் வட்டப்பாறை சிறு நீர்மின் திட்டம் விறுவிறுப்பாக நடக்கும் புவியியல் ஆய்வு
லோயர் வட்டப்பாறை சிறு நீர்மின் திட்டம் விறுவிறுப்பாக நடக்கும் புவியியல் ஆய்வு
ADDED : ஜன 31, 2026 05:27 AM

பாலக்காடு: பாலக்காடு மாவட்ட, ஊராட்சி பாலக்கயத்தில் செயல்படுத்த உள்ள லோயர் வட்டப்பாறை சிறு நீர்மின் திட்டத்திற்கான புவியியல் ஆய்வு நடைபெற்றது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கஞ்சிரப்புழா அருகே உள்ளது பாலக்கயம். வன எல்லை பகுதியான இங்குள்ள லோயர் வட்டப்பாறை பகுதியில் சிறு நீர்மின் திட்டம் செயல்படுத்த மாவட்ட ஊராட்சி முடிவெடுத்தது.
இதன் ஒரு பகுதியாக, தற்போது புவியியல் ஆய்வு நடக்கிறது. இந்திய புவியியல் ஆய்வுத் துறையை சேர்ந்த அதிகாரிகள் குழு இந்த ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர்.
நில அமைப்பு, பாறைகளின் மேற்பரப்பு வலிமை, நீர் ஆதாரங்களின் இருப்பு, இயற்கைச் சீற்றங்களுக்கான சாத்தியக்கூறுகள் மற்றும் அதன் விளைவுகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது.
அதன்பின், கல்லாறு மற்றும் செறுபுழை ஆறுகள் இணையும் இடத்தில், தடுப்பணை கட்டப்படும். அங்கிருந்து 'பென்ஸ்டாக்' குழாய்கள் வாயிலாக 'பரீத் முக்கு' பகுதியில் உள்ள நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும்.
அங்கிருந்து 'குண்டம்பொட்டி' என்ற இடத்தில் கட்டப்படும் மின் உற்பத்தி நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
அந்த மின்சாரம் கல்லடிக்கோடு துணை மின்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மின் விநியோக 'கிரிட்' உடன் இணைக்கப்படும்.
மீன்வல்லம் மற்றும் பாலக்குழி திட்டங்களுக்குப் பின், மாவட்ட ஊராட்சி மேற்கொள்ளும் மூன்றாவது நீர்மின் உற்பத்தி திட்டமாகும்.
மாவட்ட ஊராட்சியின் கீழ் இயங்கும் 'பாலக்காடு ஸ்மால் ஹைட்ரோ எலக்ட்ரிக்' நிறுவனம், ரூ. 28 கோடியில் திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது, மீன்வல்லம் திட்டத்தின் மின்சாரமும் மின்வாரியத்துக்கு வழங்கப்படுகிறது.
திட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இத்திட்டத்திற்காக, 8.27 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. நிலம் கிடைத்தவுடன் மின் உற்பத்திப் பணிகள் தொடங்கும்.
இத்திட்டம் செயல்பாட்டிற்கு வரும் போது, வட்டப்பாறை குடியேற்றப் பகுதிகளில் போக்குவரத்து வசதிகளும், மக்களின் வாழ்வாதாரமும் மேம்படும்.
மேலும், வட்டப்பாறை மற்றும் காஞ்சிரப்புழை பகுதிகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்,' என்றார்.
