/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
40 தொழிற்சாலைகளுக்கு 'கோல்டன் லீப்' விருதுகள்
/
40 தொழிற்சாலைகளுக்கு 'கோல்டன் லீப்' விருதுகள்
ADDED : செப் 21, 2025 10:43 PM
குன்னுார்; குன்னுார் 'உபாசி' மற்றும் தேயிலை வாரியம் சார்பில், தென் மாநில அளவில் நடந்த, சிறந்த தேயிலை துாளுக்கான போட்டியில், 40 தொழிற்சாலைகளுக்கு கோல்டன் லீப் விருதுகள் வழங்கப்பட்டன.
குன்னுாரில் உள்ள தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்கம் (உபாசி), தேயிலை வாரியம் சார்பில் தென் மாநில அளவில், சிறந்த தேயிலைக்கான, கோல்டன் லீப் விருதுகள் ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது.
'தேயிலையின் தரம், மனம், சுவை போன்ற குணங்கள், தோட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி அளவு, ஆய்வக பகுப்பாய்வு; சர்வதேச குழுவின் இறுதி சுவை,' என, மூன்று கட்ட தேர்வுகள் நடத்தப்பட்டு ஏலம் விடப்படுகிறது.
அதில், தேர்வு செய்யப்படும், தென் மாநில தொழிற்சாலைகளுக்கு, உபாசி மாநாட்டில், தங்க இலை விருதுகள் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், நடப்பாண்டு இந்த மாநாடு கொச்சியில் நடந்தது.
நேற்று முன்தினம் வழங்கப்பட்ட விருதுகள் குறித்து, 'கோல்டன் லீப்' விருதுகள் குழு கன்வீனர் அருண்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:
ஆண்டுதோறும் குன்னுாரில் நடக்கும் உபாசி மாநாடு இந்த முறை கொச்சியில், 8வது இந்திய மற்றும் சர்வதேச தேயிலை மாநாடாக நடத்தப்பட்டது. சர்வதேச நடுவர்கள் கலந்து கொண்ட இறுதி சுவை கண்டறியும் அமர்வுடன், சிறந்த தென் மாநில தொழிற் சாலைகளுக்கான கோல்டன் லீப் விருதுகள் வழங்கப்பட்டன.
இதில், 'உட்பிரையர் குழுமம், -8; பாரி அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், -7; கண்ணன் தேவன் ஹில்ஸ் பிளாண்டேஷன்ஸ், -6; ஹாரிசன்ஸ் மலையாளம் லிமிடெட், 5 விருதுகள்; ஹாரிசன்ஸ் மலையாளம், கிரீன் டீ எஸ்டேட், கோடநாடு எஸ்டேட் தலா,3 விருதுகள்; வாசுபிரதா பிளாண்டேஷன்ஸ், டர்மோனா டீ இண்டஸ்ட்ரீஸ் தலா, 2 விருதுகள்; கண்ணவரை டீ இண்டஸ்ட்ரீஸ் ஒரு விருது,' என, மொத்தம், 40 விருதுகள் வழங்கப்பட்டன, விருதுகளை கேரள மாநில அரசின் தொழில் துறை அமைச்சர் ராஜீவ், வெற்றியாளர்களுக்கு வழங்கினார். இவ்வாறு அவர் கூறினார்.