/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குழியில் சிக்கிய அரசு பஸ்; போராடி மீட்ட பயணிகள்
/
குழியில் சிக்கிய அரசு பஸ்; போராடி மீட்ட பயணிகள்
ADDED : டிச 10, 2024 11:25 PM
கோத்தகிரி; கோத்தகிரி அருகே, குழியில் சிக்கிய அரசு பஸ்சை பயணிகள் போராடி மீட்டனர்.
கோத்தகிரியில் இருந்து, அதிக குக்கிராமங்கள் அமைந்துள்ள கோடநாடு பகுதிக்கு, நாள்தோறும் அரசு பஸ் இயக்கப்படுகிறது. பஸ்சில் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படும்.
இந்நிலையில், கோத்தகிரியில் இருந்து, 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன், நேற்று அரசு பஸ் கோடநாடு பகுதிக்கு புறப்பட்டது. தாழ்வான பகுதியில் சென்று கொண்டிருந்த அரசு பஸ், தண்ணீர் பள்ளம் என்ற பகுதியில் குழியில் சிக்கியது.
டிரைவர் நீண்ட நேரம் போராடியும், பஸ்சை குழியில் இருந்து மேலே எடுக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து, பயணிகள் கீழே இறங்கி பஸ்சை தள்ளி, ஒரு வழியாக குழியில் இருந்து பஸ்சை மேலே எடுத்தனர். இதனால், ஒரு மணி நேரம் காலதாமதம் ஏற்பட்டது.
அப்பகுதி மக்கள் கூறுகையில், 'அதிக மக்கள் தொகை கொண்ட கோடநாடு சாலை நேர்த்தியாக சீரமைக்கப்பட்டு இருந்தாலும், குழிகள் மூடப்படாமல் உள்ளன. இதனால், வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, குழிகளை மூட சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.