/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கரும்புகையை கக்கியபடி இயக்கப்படும் அரசு பஸ்கள்
/
கரும்புகையை கக்கியபடி இயக்கப்படும் அரசு பஸ்கள்
ADDED : பிப் 17, 2025 10:28 PM

கோத்தகிரி; கோத்தகிரி வழித்தடத்தில், கரும்புகையை கக்கியபடி இயக்கப்படும் அரசு பஸ்சால், பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோத்தகிரி அரசு போக்குவரத்து கழக கிளையில் இருந்து, சமவெளி பகுதி உட்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், 50க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதேபோல, குன்னுார் கிளையில் இருந்தும், கோத்தகிரி பகுதிக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், குன்னுார் கிளையில் இருந்து, கட்டபெட்டு, டி. மணியட்டி, கலிங்கனட்டி மற்றும் கக்குச்சி வழியாக தீனட்டி கிராமத்திற்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது.
கிராமங்கள் நிறைந்த வழித்தடத்தில் இயக்கப்படும் அந்த பஸ்சில் இருக்கை கிடைக்காமல், நின்று கொண்டு பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இந்நிலையில் குறிப்பிட்ட பஸ் கரும்புகையை கக்கியபடி இயக்கப்படுகிறது. இதனால் காற்று மாசு படுவதுடன், எதிரில் வரும் வாகனங்கள் மற்றும் பஸ்சை பின்தொடரும் வாகனங்களில் செல்வோர் பாதிக்கப்படுகின்றனர். மேலும், பஸ்சிற்குள் புகுந்துவிடும் புகையால், பயணிகள் மூச்சு விட திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, பயணிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, அரசு போக்குவரத்து நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

