அறிவியல் கண்காட்சியில் பரிசு பெற்ற அரசு பள்ளி மாணவர்கள்
அறிவியல் கண்காட்சியில் பரிசு பெற்ற அரசு பள்ளி மாணவர்கள்
ADDED : மார் 06, 2026 05:09 AM
பந்தலுார்: ஊட்டியில் நடந்த தேசிய அறிவியல் தின கண்காட்சியில், புளியம்பாறை அரசு பள்ளி மாணவர்கள் பரிசு பெற்றனர்.
தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, ஊட்டி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி நடந்தது.
அதில், புளியம்பாறை அரசு உயர்நிலைப்பள்ளியில், 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் மேகலாஸ்ரீ, நவீனா ஆகியோர், 'விண்வெளியில் அனுப்பப்பட்டு இதுவரை பயன்பாட்டில் இல்லாத, செயற்கை கோள்களின் உதிரி பாகங்களை, மீண்டும் மறுசுழற்சி செய்து, விண்வெளியிலேயே செயற்கை கோள், ஏவுவதற்கான வழிமுறைகளை செயற்கை நுண்ணறிவு மூலம், செயல்பாட்டில் கொண்டு வரலாம்,' என்ற வகையில், அறிவியல் மாதிரியை உருவாக்கி மூன்றாம் பரிசு பெற்றனர்.
அதேபோல், 6-ம் வகுப்பு படிக்கும் நிதா மற்றும் சரண் ஆகியோர், விண்வெளியில் செயற்கை கோள்கள் ஒன்றோடு ஒன்று மோதுவதை தவிர்ப்பதற்கு, சேர்க்கை நுண்ணறிவு கேமரா பயன்படுத்தி புதிய தொழில்நுட்பத்தில், ஏவ கூடிய செயற்கை கோள்களை பாதுகாப்பதற்கான, செயல்பாட்டு மாதிரி உருவாக்கி மூன்றாம் பரிசு பெற்றனர்.
இந்த படைப்புகளை உருவாக்குவதற்கு காரணமாக இருந்த, 'லேண்ட் பவுண்டேஷன்' நிதி உதவியுடன், 'லேர்னிங் லிங்க் பவுண்டேஷன்' நடத்தும் ஆய்வகத்தில், தங்களுக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர் ஏஞ்சல் மற்றும் தலைமை ஆசிரியர் சங்கர் ஆகியோருக்கு மாணவர்கள் நன்றியை தெரிவித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
