ADDED : அக் 29, 2024 08:43 PM
கூடலுார்: முதுமலை, மசினகுடியில் பட்டாசு இல்லாத பசுமை தீபாவளி கொண்டாட வனத்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி கோட்ட துணை இயக்குனர் அருண்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
முதுமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ள பகுதி, 3 மாநிலங்கள் இணையும் நிலப்பரப்பாகும். புலிகள் அதிகமாக வனத்தில் வாழக்கூடிய இடமாகும். மேலும், யானை, காட்டெருமை, சிறுத்தை, கரடி, பாறு கழுகு, கழுதைப்புலி உள்ளிட்ட பல்வேறு வகையான அரியவகை வன உயிரினங்களின் முக்கிய வாழ்விடமாக உள்ளது.
இவைகளை, நம் முன்னோர் நமக்காகவும், நாட்டின் நன்மைக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் விட்டு சென்றனர். இவைகளை நாமும் பாதுகாத்து நமது எதிர்கால சந்ததிக்கு விட்டு செல்ல வேண்டும்.
எனவே, வரும் தீபாவளி பண்டிகையை, காற்று மாசு படாத வண்ணமும், வனவிலங்குகள் பாதிக்கப்படாத வகையில் பட்டாசு வெடிப்பதை தவிர்த்து பசுமை தீபாவளி கொண்டாட அனைவரும் ஒருங்கிணைந்து உறுதி கொள்வோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.