/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாவட்டத்தில் ஆறு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பசுமை பள்ளி திட்டம்! 50 ஆசிரியர்களுக்கு பயிற்சி; சூழல் பாதுகாப்புக்கு அடித்தளம்
/
மாவட்டத்தில் ஆறு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பசுமை பள்ளி திட்டம்! 50 ஆசிரியர்களுக்கு பயிற்சி; சூழல் பாதுகாப்புக்கு அடித்தளம்
மாவட்டத்தில் ஆறு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பசுமை பள்ளி திட்டம்! 50 ஆசிரியர்களுக்கு பயிற்சி; சூழல் பாதுகாப்புக்கு அடித்தளம்
மாவட்டத்தில் ஆறு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பசுமை பள்ளி திட்டம்! 50 ஆசிரியர்களுக்கு பயிற்சி; சூழல் பாதுகாப்புக்கு அடித்தளம்
ADDED : ஜூலை 12, 2025 12:12 AM

ஊட்டி; 'நீலகிரியில் உள்ள பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு சிறு வயதிலேயே ஏற்படுத்தும் வகையில், பசுமை பள்ளி திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வு மற்றும் பொறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பசுமை பள்ளி என்ற திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
இதன் முன்னோட்டமாக, ஊட்டி, குன்னுார், கோத்தகிரி மற்றும் கூடலுார் ஆகிய வட்டங்களில் உள்ள, 50 பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களுக்கு சுற்றுசூழல் பாதுகாப்பு தொடர்பாக, தொண்டு நிறுவனத்தின் சார்பில் பயிற்சி அளிக்க கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இப்பயிற்சியில் மண் சரிவு தடுக்கும் முறை, மட்கும் குப்பை, மட்காத குப்பைகள் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சிகள் கருத்தாளர்கள் வாயிலாக வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
50 ஆசிரியர்களுக்கு பயிற்சி
இந்நிலையில், ஊட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், மாவட்டத்தின் பல பள்ளிகளின் இருந்தும் தேர்வு செய்யப்பட்ட, 50 ஆசிரியர்களுக்கு பசுமை பள்ளி திட்டம் தொடர்பாக ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், கலெக்டர் லட்சுமி பவ்யா பங்கேற்று பேசுகையில்,''மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பசுமை பள்ளி திட்டம் துவக்கப்பட்டு, அதற்கான பயிற்சியில் பல ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
பயிற்சி முடித்த ஆசிரியர்கள் தங்களது பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம் திட்டம் குறித்து எடுத்து கூறி, சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பட்சத்தில் வரும் தலைமுறையினரும் அதனை பின்பற்ற ஏதுவாக அமையும். இத்திட்டத்தின் வாயிலாக மாணவர்களிடம் சுற்றுச்சூழல், கல்வி அறிவை வளர்ப்பதுடன், பாரம்பரிய மரபுகள் மற்றும் நவீன சுற்றுச்சூழல் அறிவியல் ஆகியவற்றை தெரிந்து கொள்ள முடியும்,'' என்றார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நந்த குமார் பேசுகையில், ''இத்திட்டம் முதன் முதலாக நம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் செயல்படுத்தி வரும் பட்சத்தில், சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தகூடிய செயல் பாட்டாளர்களாக மாணவர்கள் திகழ வாய்ப்புள்ளது. மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, மாதம் ஒரு முறை திடக்கழிவு மேலாண்மை, தோட்டக்கலை பண்ணைகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட வனப்பகுதிகளுக்கு களப்பயணம் அழைத்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்படும்.
இப்பயிற்சியில் வழங்கப்பட்ட பல்வேறு கருத்துக்களை ஆசிரியர்கள் மாணவர்களிடையே தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், வனம் சூழ்ந்த நீலகிரி மாவட்டத்தில் இத்திட்டத்தினை வெற்றிகரமாக செயல்படுத்த முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,'' என்றார்.
நிகழ்ச்சியில், உதவி திட்ட அலுவலர் அர்ஜூணன், பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார், தொண்டு நிறுவன நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.