/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூடலுாரில் நடக்கும் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு
/
கூடலுாரில் நடக்கும் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு
ADDED : பிப் 20, 2025 10:06 PM
கூடலுார்; கூடலுாரில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை, கலெக்டர் லட்சுமி பவ்யா ஆய்வு செய்தார்.
கூடலுார் பகுதியில், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ், வளர்ச்சி பணிகளை மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா ஆய்வு செய்தார்.
வண்டிப்பேட்டை ஊராட்சி பள்ளி, ஸ்ரீமதுரை மேல்நிலைப் பள்ளிகளில் சத்துணவு சமையல் கூடம்; மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம்; 'அம்மா' உணவகத்தில் வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்தார்.
நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் அளிக்கப்படும் சிகிச்சைகள், மருந்துகளின் இருப்பு குறித்து டாக்டரிடம் கேட்டறிந்தார்.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் உதவிகள், கல்வி கடன் குறித்த விபரங்கள் கேட்டறிந்தார். துப்புக்குட்டி பேட்டை ரேஷன் கடை, அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டார்.
தொடர்நது, சளிவயல் பகுதியில் உள்ள பழங்குடி கிராமத்துக்கு சென்று அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டார். அப்போது பழங்குடி மக்கள் பல்வேறு தேவைகள் குறித்து தெரிவித்தனர். அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதாக உறுதி அளித்தார்.
தேவர்சோலை பேரூராட்சி போஸ்பாரா, -செம்பக்கொல்லி பழங்குடி கிராமத்துக்கு இடையே, தமிழ்நாடு நகரப்புற சாலை உட்கட்டமைப்பு நிதியின் கீழ், நடைபெறும் சாலை பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.
கூடுதல் கலெக்டர் கவுசிக், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், ஆர்.டி.ஓ., செந்தில்குமார், மகளிர் திட்ட இயக்குனர் காசிநாதன், தாசில்தார் முத்துமாரி உட்பட பலர் பங்கேற்றனர்.

