ADDED : மார் 10, 2026 06:08 AM

பாலக்காடு: பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., கோபிநாத், குருவாயூர் தேவஸ்தான நிர்வாக குழுவின், 16-வது தலைவராக நேற்று பொறுப்பேற்றார்.
கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவில் நிர்வாக குழு தலைவர் விஜயன் மற்றும் உறுப்பினர் ரவீந்திரன் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, புதிய தலைவராக கோபிநாத் மற்றும் உறுப்பினராக ஷினிஜா ஆகியோரை கேரள அரசு அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் குருவாயூர் தெற்கு நடைப்பகுதியில் உள்ள வைஷ்ணவம் ஆடிட்டோரியத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது.
தேவஸ்தான செயலாளரும், கமிஷனருமான ராஜமாணிக்கம் முன்னிலையில், புதிய உறுப்பினர்கள் இருவரும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். நிர்வாகக் குழு உறுப்பினர் பிரம்மஸ்ரீ மல்லிசேரி பரமேஸ்வரன் நம்பூதிரிப்பாடு குத்துவிளக்கேற்றி விழாவைத் துவக்கி வைத்தார்.
பதவியேற்பை தொடர்ந்து நடைபெற்ற நிர்வாகக் குழு கூட்டத்தில், புதிய தலைவராக கோபிநாத் தேர்வு செய்யப்பட்டதையடுத்து, கோப்புகளில் கையொப்பமிட்டு பொறுப்பேற்றார்.
இந்நிகழ்வில், குருவாயூர் எம்.எல்.ஏ., அக்பர், நகராட்சி தலைவர் சுனிதா, துணைத் தலைவர் ஜோதிராஜ், தேவஸ்தான நிர்வாக அதிகாரி அருண்குமார் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
ஆலத்தூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.,-வான கோபிநாத், 20 ஆண்டுகள் பெரிங்கோட்டுக்குறிச்சி ஊராட்சித் தலைவராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
மேலும், நிர்வாகக் குழுவின் முதல் பெண் உறுப்பினர் என்ற சிறப்பை ஷினிஜா பெற்றுள்ளார். இவர், முதுகலை மற்றும் கல்வியியல் பட்டதாரி. கொடுங்கல்லூர் நகராட்சியின் முன்னாள் தலைவராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
