/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
உருளை கிழங்கு அறுவடை: விலை கிடைப்பதால் மகிழ்ச்சி
/
உருளை கிழங்கு அறுவடை: விலை கிடைப்பதால் மகிழ்ச்சி
ADDED : நவ 06, 2024 09:32 PM

கோத்தகிரி; கோத்தகிரி பகுதியில் உருளைக்கிழங்கு அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில், தேயிலை விவசாயம் பிரதானமாக இருந்தாலும், நீர் ஆதாரம் உள்ள விளை நிலங்களில், கேரட், முட்டைகோஸ், பீட்ரூட், முள்ளங்கி மற்றும் உருளைக்கிழங்கு உள்ளிட்ட மலை காய்கறி விவசாயம் நடந்து வருகிறது.
மற்ற காய்கறிகளை காட்டிலும், உருளைக்கிழங்கு விவசாயம் மேற்கொள்வதில் விவசாயிகளுக்கு கூடுதல் முதலீடு தேவை. தவிர அறுவடை செய்யப்படும் உருளைக்கிழங்கு, தரம் பிரித்து மேட்டுப்பாளையம் மண்டிகளில் விற்பனை செய்ய, லாரி வாடகை, ஏற்று; இறக்கு கூலி மற்றும் மண்டி கமிஷன் உள்ளிட்ட செலவினங்கள் விவசாயிகளுக்கு கூடுகிறது.
மேலும், வன விலங்குகளில் இருந்து, பயிரை பாதுகாக்க விவசாயிகளுக்கு கூடுதல் சிரமம் ஏற்படுகிறது. இதனால், கடந்த காலங்களை காட்டிலும், உருளைக்கிழங்கு பயிரிடும் பரப்பளவு குறைந்துள்ளது.
இருப்பினும், விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், கூடுமானவரை கடன் பெற்று விவசாயிகள் உருளைக்கிழங்கு பயிரிட்டு பாதுகாத்து வருகின்றனர்.
இந்நிலையில், கோத்தகிரி பகுதியில், நெடுகுளா, ஈளாடா, கூக்கல்தொறை உள்ளிட்ட பகுதிகளில் அதிக பரப்பளவில் உருளைக்கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. நடப்பாண்டு, தேவையான மழை பெய்த நிலையில், பயிர்கள் செழித்து வளர்ந்து அறுவடைக்கு தயாராகி வருகிறது.
தற்போது, 45 கிலோ எடை கொண்ட ஒரு துண்டு உருளைக்கிழங்கு, 2,800 ரூபாய்; உள்ளூர் மார்க்கெட்டில், ஒரு கிலோ உருளைக்கிழங்கு, 60 முதல் 65 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், தோட்டங்களில் தண்ணீர் தேங்கி, அறுவடைக்கு தயாரான உருளைக்கிழங்கு அழுக வாய்ப்புள்ளது. இதனால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை தவிர்க்க, உருளைக்கிழங்கு அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.