/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுாரில் வெளுத்து வாங்கும் கன மழையால் திக்... திக்...!மண் சரிவால் அந்தரத்தில் தொங்கும் வீடுகள்
/
குன்னுாரில் வெளுத்து வாங்கும் கன மழையால் திக்... திக்...!மண் சரிவால் அந்தரத்தில் தொங்கும் வீடுகள்
குன்னுாரில் வெளுத்து வாங்கும் கன மழையால் திக்... திக்...!மண் சரிவால் அந்தரத்தில் தொங்கும் வீடுகள்
குன்னுாரில் வெளுத்து வாங்கும் கன மழையால் திக்... திக்...!மண் சரிவால் அந்தரத்தில் தொங்கும் வீடுகள்
ADDED : அக் 22, 2025 11:33 PM

நீலகிரி மாவட்டம், குன்னூரில் கடந்த 18ம் தேதியில் இருந்து கனமழை பெய்து வருகிறது. வண்ணார பேட்டை, மவுண்ட் பிளசன்ட் உட்பட பல இடங்களிலும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
குன்னூர் - ஊட்டி நெடுஞ்சாலை, பாலவாசி அருகே, தேசிய நெடுஞ்சாலை துறையினரால், சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டு, சிறிய அளவில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது.
இங்கு தினமும் பெய்யும் மழையால் சிறிது சிறிதாக சுவர் இடிந்து விழுகிறது. இங்குள்ள மவுண்ட் பிளசன்ட் பகுதியில் குடியிருப்புகள் அந்தரத்தில் தொங்கிக் கொண்டுள்ளன. இதன் அருகில் ஏற்பட்ட மண் சரிவில், புல்மோர் பள்ளி செல்லும் குறுக்கு சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
டி.டி.கே., சாலையில் மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்படும் நிலை உள்ளது. நகர பகுதிகளில் நெருக்கமாக அமைக்கப்பட்ட வீடுகள் இடையே உள்ள சிறிய கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டால் நடைபாதை வழியாக மழை நீர் வழிந்தோடிகுடியிருப்புகளில் மழை நீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அடிக்கடி மண்சரிவும் ஏற்படுகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் இடியுடன் மழை பெய்வதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தயாராகுமா பிரத்யேக திட்டம் கடந்த ஆண்டு செப். 30ல் அலாய் சேட் காம்பவுண்ட் பகுதியில் வீட்டிற்குள் மண் சரிந்து ஆசிரியை சத்யா என்பவர் பலியானார். அப்போது ஆய்வு மேற்கொண்டதில், மழைநீர் செல்லும் இடம் தடுக்கப்பட்டு இருந்ததும், வெள்ளம் தடம் மாறி சென்றதாலும் பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது.
இது போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் மழை நீர் வடிகால் வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. முறையாக பராமரிக்காததும், அதன் மீது கட்டடங்கள் அதிகரித்துள்ளதால் பேரிடருக்கு முக்கிய காரணமாக உள்ளது.
நிலச்சரிவு அபாயம் என குன்னூர் கோத்தகிரியில், 107 இடங்கள் அறிவிக்கப்பட்ட போதும், பிரம்மாண்டமான கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதும் பேரிடருக்கு வழி வகுக்கிறது.
ஆற்றோர பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் கூடாது என ஐகோர்ட் உத்தரவுகள் மீறப்பட்டு, டி.டி.கே., ரோடு, ரேலி காம்பவுண்ட், ராஜாஜி நகர் பகுதிகளில் பல இடங்களிலும் புற்றீசல் போல கட்டடங்கள் அதிகரித்து வருகிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர்.
பேரிடர் பாதிப்புகளை தவிர்க்கவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தனியாரின் நிதி பங்களிப்புடன், கிளீன் குன்னூர் அமைப்பு சார்பில், கால்வாய்கள், ஆறுகள் தூர்வாரப்பட்டது.
தன்னார்வலர் முபாரக் கூறுகையில், குன்னுார் பகுதிகளில் ஆற்றில் புதர்கள் சூழ்ந்து காணப்படுவதுடன் கால்வாய்களிலும் அடைப்பு அகற்றப்படாமல் உள்ளது. மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதுடன் குடியிருப்புகளுக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.
பேரிடர் காலங்களில் மட்டும் இல்லாமல் இவற்றை தூர்வாரி மழை வெள்ளம் பாதிப்பின்றி செல்ல பிரத்யேக திட்டத்தை நகராட்சி நிர்வாகம் தாமதிக்காமல் எடுக்க வேண்டும், என்றார்.