வெளிநாட்டில் முதுகலை படிப்பு முஸ்லிம் மாணவர்களுக்கு உதவி
வெளிநாட்டில் முதுகலை படிப்பு முஸ்லிம் மாணவர்களுக்கு உதவி
ADDED : செப் 11, 2026 02:21 PM
ஊட்டி: சிறுபான்மையின முஸ்லிம் மாணவர்கள் வெளிநாட்டில் முதுகலை படிப்பு பயில, கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது.
கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
மாநில அரசு, நடப்பு ஆண்டில் முஸ்லிம் சிறுபான்மையின மாணவ, மாணவியர் உயர்தர கல்வி பெற ஏதுவாக, வெளிநாடு சென்று படிக்கும், 10 மாணவர்களுக்கு, தலா, 36 லட்சம் ரூபாய் வீதம் கல்வி உதவித்தொகை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் மாணவர்கள் உலகளாவிய (குவாக்கரெல்லி சைமண்ட்ஸ்) தரவரிசையில் முதல், 250 இடங்களுக்குள் உள்ள பல்கலை கழகங்கள், கல்வி நிறுவனங்களில் இருந்து, நிபந்தனையற்ற சேர்க்கை கடிதம் பெற்றிருக்க வேண்டும்.
பெற்றோரின் ஆண்டு வருமானம், 8 லட்சம் ரூபாய்க்கும் மிகாமல் இருக்க வேண்டும். பட்டப் படிப்பில், 60 சதவீதம் அல்லது அதற்கு இணையாக தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். மருத்துவம், பொறியியல், மேலாண்மை, அறிவியல், சுகாதாரம் பயன்பாட்டு அறிவியல், சர்வதேச வணிகம், பொருளாதார நிதி கணக்கியல், மனிதநேய படிப்புகள் சமூக அறிவியல், நுண்கலைகள் மற்றும் சட்டம் போன்ற பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்து முதுகலை பட்ட படிப்புக்கான சேர்க்கை பெறுபவராக இருத்தல் வேண்டும்.
இத்திட்டத்தில் விண்ணப்பிக்க, www.bcmbcmw.tn.gov.in/welfschemesminorities.htm என்ற இணையத்தளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். பின், உரிய ஆவணங்களுடன், ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலச மஹால் (பாரம்பரிய கட்டடம்), முதல் தளம், சேப்பாக்கம், 600005 என்ற முகவரிக்கு, அக்., 15ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
