/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி அருகே அவலாஞ்சியில் அதிகபட்ச மழை பதிவு; குளிரால் மக்கள் அவதி
/
ஊட்டி அருகே அவலாஞ்சியில் அதிகபட்ச மழை பதிவு; குளிரால் மக்கள் அவதி
ஊட்டி அருகே அவலாஞ்சியில் அதிகபட்ச மழை பதிவு; குளிரால் மக்கள் அவதி
ஊட்டி அருகே அவலாஞ்சியில் அதிகபட்ச மழை பதிவு; குளிரால் மக்கள் அவதி
ADDED : ஜூன் 15, 2025 09:34 PM

ஊட்டி; ஊட்டி அருகே அவலாஞ்சியில் அதிகபட்சமாக, 14 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த, 14 மற்றும் 15ம் தேதிகள், 'ரெட் அலர்ட்' அறிவிப்பால், குந்தா, ஊட்டி, கூடலுார், பந்தலுார் ஆகிய தாலுகா பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
அந்தந்த பகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அலுவலர்கள், பேரிடர் பகுதிகளை ஆய்வு செய்தனர். இந்நிலையில், ' ரெட் அலர்ட் ' அறிவிப்பால் கடந்த இரண்டு நாட்களாக எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. நேற்று காலை, 7 :00 மணி நிலவரப்படி, அவலாஞ்சியில், 14 செ.மீ., அப்பர் பவானி, 7 செ.மீ., பந்தலுார், 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. நேற்று காலை முதல் ஊட்டியில் தொடர் மழை பெய்து வருகிறது. அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் வெம்மை ஆடைகளை அணிந்து சுற்றுலா பயணியர் இயற்கை காட்சிகளை ரசித்தனர். கடும் குளிரால் உள்ளூர் மக்களும் அவதிப்பட்டனர்.
குன்னுார், காலையில் மழையின் தாக்கம் குறைவாக இருந்தது. பலத்த காற்றுடன் சாரல் காணப்பட்டது. அதில், வண்டிச்சோலை அளக்கரை சாலையில் நேற்று காலை மரம் விழுந்தது. தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் மரத்தை வெட்டி அகற்றினர். இதனால் இந்த சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பந்தலுார்
பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில்,பலத்த காற்றுடன் மழை பெய்து வரும் நிலையில், நெலாக்கோட்டை அருகே மேபீல்டு என்ற இடத்தில் ஆசியா என்பவரின் வீட்டிற்கு அருகில் இருந்த காய்ந்த மரம் ஒன்று அடியோடு பெயர்ந்து வீட்டு கூரை மீது விழுந்தது. இது குறித்து பகுதி மக்கள் போலீசார் மற்றும் வருவாய் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று, அப்பகுதியில் மக்களுடன் இணைந்து மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.
--புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே டிரான்ஸ்பார்மர் மீது மரம் முறிந்து விழுந்தது. இதனால், பந்தலுார் சுற்றுவட்டார பகுதி முழுவதும் மின் சப்ளை துண்டிக்கப்பட்டது.
தொடர்ந்து மின் வாரிய பணியாளர்கள், மரத்தை வெட்டி அகற்றி சேதமான மின்கம்பங்களை மாற்றி பராமரிப்பு பணியில் ஈடுபட்டனர்.
--அப்பகுதியில் உள்ள பழங்குடியின கிராமத்தில் தங்கமணி என்பவரின் வீட்டின் பின்பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதில், வீட்டு சுவர் விரிசல் அடைந்தது. மண்ணை அகற்றி பாதுகாப்பு பணி மேற்கொள்ள தாசில்தார் சிராஜூநிஷா நெலாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு அறிவுறுத்தினார்.
--இந்திரா நகர் பகுதியில் கண்ணன் என்பவரின் வீட்டு பின் பகுதியில் லேசான மண்சரிவு ஏற்பட்டு உள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு அலுவலர் சுரேஷ் கண்ணன் தலைமையில், தாசில்தார்கள் சிராஜூநிஷா, செந்தில்குமார், வட்ட வழங்கல் அலுவலர் பொன்னரசு, வருவாய் அலுவலர் வாசுதேவன், வி.ஏ.ஓ., அசோக்குமார் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.