/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பந்தலுாரில் கிடப்பில் போடப்பட்ட மருத்துவமனை கட்டுமான பணி; இடியும் நிலையில் நகராட்சி கட்டடம்

ADDED : ஜூன் 23, 2025 10:34 PM

பந்தலுார்; பந்தலுாரில் கிடப்பில் போடப்பட்ட மருத்துவமனை கட்டுமான பணியால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பந்தலுார் தாலுகாவில் அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் தங்குவதற்கு, தனித்தனியாக குடியிருப்புகள் கட்டப்பட்டு இருந்தது. நல்ல நிலையில் இருந்த இந்த குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, புதிய கட்டடம் கட்டுவதற்கு, 5.75 கோடி ரூபாய் அரசு ஒதுக்கீடு செய்தது.
நிதி ஒதுக்கீடு செய்து, 3 ஆண்டுகள் கடந்த நிலையில், கடந்த, 2024ல் பார்லிமென்ட் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முதல் நாள், நெல்லியாளம் நகராட்சி சார்பில், 5- கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறி அவசரகதியில் பணி துவங்குவதற்கு பூமி பூஜை போட்டனர்.
தொடர்ந்து, பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டு அங்கு, புதிய கட்டடம் கட்டுவதற்காக, 10 அடி ஆழமுள்ள குழிகள் தோண்டப்பட்டன. ஆனால், கட்டுமான பணி துவங்காமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளதால், குழிகளில் மழை தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது. இந்த பகுதிக்கு வந்து செல்லும் சிறுவர்கள் தவறி விழுந்தால் பாதிப்புகள் ஏற்படும்.
அத்துடன் நகராட்சி அலுவலகத்தை ஒட்டி இந்த பணி மேற்கொண்டுள்ள நிலையில், தற்போது பெய்து வரும் மழையில் நகராட்சி கட்டடத்தின் முன்பக்க தடுப்பு சுவர் இடிந்து விழுந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் கட்டடம் இடியும் அபாயத்தில் உள்ளது.
பொது மக்கள் கூறுகையில், 'கட்டுமான பணியை துவங்கிய விரைவாக முடிக்க வேண்டும். பணியை கிடப்பில் போட்டுள்ள ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.