/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'வள்ளுவம் வாசித்தால் வாழ்க்கை வளமாகும்'
/
'வள்ளுவம் வாசித்தால் வாழ்க்கை வளமாகும்'
ADDED : பிப் 16, 2024 11:39 PM
அன்னுார்:கவையன் புத்துார் தமிழ்ச் சங்கம் சார்பில், குரும்பபாளையம், ஆதித்யா கலை அறிவியல் கல்லுாரியில், தமிழ்ச் சங்க விழா நடந்தது. உதவி பேராசிரியர் கணேசன் வரவேற்றார்.
தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் ரங்கநாதன் பேசுகையில், ''இந்திய மண்ணில் கிடைக்கிற மகிழ்ச்சி வேற எந்த நாட்டுக்கு சென்றாலும் கிடைக்காது.
இயல்பான வாழ்க்கை, இயற்கையான சூழல் நம் நாட்டில் மட்டுமே அமைந்துள்ளது. குழந்தைகளின் விருப்பம் அறிந்து அதில் திறமையை வளர்க்க பெற்றோர் வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும். நம்முடைய நோக்கத்தை அவர்களிடம் திணிக்க கூடாது,'' என்றார்.
ஆசிரியர் குமார் முன்னிலை வகித்து பேசுகையில், ''தமிழ்ச் சங்கங்கள் மாணவர்களை தத்தெடுத்து, பேச்சு, கட்டுரை, கவிதை, நடனம் ஓவியம் என கற்பிக்க வேண்டும். திறனறிந்து ஊக்கப்படுத்த வேண்டும்,'' என்றார்.
பாரதி மெட்ரிக் பள்ளி முதல்வர் நாகராஜன் பேசுகையில், ''தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதை புரிந்து மாணவர்கள் நடந்து கொள்ள வேண்டும்,'' என்றார்.
எஸ்.எம்.எஸ். கலை அறிவியல் கல்லுாரி உதவி பேராசிரியை பிரதீபா பேசுகையில், ''மனநலம் காக்க வேண்டியது. காலத்தின் கட்டாயம் ஆகிவிட்டது. வள்ளுவத்தை படித்தால் வளமாக வாழலாம். வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் வள்ளுவர் தெரிவித்துள்ளார்,'' என்றார்.
அரசு கலைக் கல்லுாரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசுகையில், ''புதிய தலைமுறையின் வாழ்க்கை முறை பண்பாட்டுக்கும் நம் பாரம்பரியத்துக்கும் ஏற்றதாக இல்லை. இவற்றை மாற்ற சமூக புரட்சி தேவை. காசு கொடுத்து காரியம் சாதிக்கும் கலாசாரம் மாற வேண்டும்,'' என்றார்.
பவளக்கொடி கும்மி குழுவினர் கவுரவிக்கப்பட்டனர். முன்னாள் முதன்மை கல்வி அலுவலர் நாராயணசாமி, ஓய்வு பெற்ற பேராசிரியர் ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.