/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோத்தகிரி வழியாக விதிகளை மீறி இரவு நேரத்தில் மரம் கடத்தல்? மலை மாவட்ட சிறு விவசாயிகள் நலச்சங்கம் குற்றச்சாட்டு
/
கோத்தகிரி வழியாக விதிகளை மீறி இரவு நேரத்தில் மரம் கடத்தல்? மலை மாவட்ட சிறு விவசாயிகள் நலச்சங்கம் குற்றச்சாட்டு
கோத்தகிரி வழியாக விதிகளை மீறி இரவு நேரத்தில் மரம் கடத்தல்? மலை மாவட்ட சிறு விவசாயிகள் நலச்சங்கம் குற்றச்சாட்டு
கோத்தகிரி வழியாக விதிகளை மீறி இரவு நேரத்தில் மரம் கடத்தல்? மலை மாவட்ட சிறு விவசாயிகள் நலச்சங்கம் குற்றச்சாட்டு
ADDED : மார் 24, 2025 10:43 PM

கோத்தகிரி; 'கோத்தகிரி, குன்னுார், ஊட்டி சுற்றுப்புற பகுதியில், வனத்துறையின் விதிகளை மீறி, இரவு நேரத்தில் லாரிகளில் மரம் வெட்டி கடத்தப்படுவது தொடர்கிறது,' என, மலை மாவட்ட சிறு விவசாயிகள் நலச்சங்கம் குற்றம்சாட்டி உள்ளது.
ஊட்டி, குன்னுார், கோத்தகிரி உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளில், பட்டா மற்றும் புறம்போக்கு நிலங்களில் வளர்க்கப்படும், சில்வர் ஓக் மரங்கள், சீகை, கற்பூர மரங்கள் வனத்துறையினர் அனுமதியுடன் வெட்டப்பட்டு வருகின்றன. அதில், சில இடங்களில் வனத்துறை அனுமதியின்றியும், விதிகளை மீறியும் மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. பகல் நேரத்தில் வெட்டப்படும், மரங்கள் லாரிகளில் ஏற்றி நிறுத்தப்பட்டு, இரவு, 8:00 மணிக்கு மேல் கடத்தப்படுகின்றன.
இதில், சில்வர் ஓக் மரங்கள் கோத்தகிரி மற்றும் மேட்டுப்பாளையம் சாமில்களுக்கும், சீகை மற்றும் கற்பூரம் உள்ளிட்ட மரங்கள் உள்ளூர் தேயிலை தொழிற்சாலைகளுக்கும் வினியோகிக்கப்படுகின்றன.
ஊட்டி, குன்னுார் மற்றும் கோத்தகிரி தாலுகா கிராம புற பகுதிகளில் இருந்து விதிமீறி, அனுமதி இல்லாமல் கடத்தப்படும் மரங்களை அவ்வப்போது, வனத்துறையின் பறக்கும் படையினர் பிடித்து அபராதம் விதித்தாலும், கோத்தகிரி வழியாக இரவில் மரக்கடத்தல் சம்பவங்கள் தொடர்கின்றன.
இத்தகைய மர லாரிகள் குஞ்சப்பனை உள்ளிட்ட சோதனை சாவடிகள் வழியாக மலை இறங்குகின்றன. 'இதனை வனத்துறை மற்றும் வருவாய்துறை கண்டு கொள்வதில்லை,' என்ற குற்றச்சாட்டு, விவசாயிகள், உள்ளூர் மக்கள் மத்தியில் உள்ளது.
கண்டு கொள்வதில்லை
மலை மாவட்ட சிறு விவசாயிகள் நலச்சங்க தலைவர் தும்பூர் போஜன் கூறுகையில், ''தேயிலை தோட்டங்களில் வளர்க்கப்படும் சில்வர் ஓக் மரங்களை விவசாயிகளிடம் இருந்து, வியாபாரிகள் அடிமாட்டு விலைக்கு வாங்கி, சாமில்களுக்கு அதிக விலைக்கு விற்று நல்ல லாபம் சம்பாதிக்கின்றனர். சில நேரங்களில், சில்வர் ஓக் அல்லாத காட்டு மரங்களும்; விலை உயர்ந்த மரங்களும் வெட்டி கடத்தப்படுகிறது. சம்பந்தப்பட்ட துறையினர் கண்டு கொள்ளாமல் உள்ளது விவசாயிகள்; மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரங்களில் மர லோடு ஏற்றி லாரிகள் செல்ல கூடாது என்ற விதிகளை, ஊட்டி, கோத்தகிரி சுற்றுப்புற பகுதிகளில் யாரும் பின்பற்றுவதில்லை. உயர் அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்,'' என்றார்.
கடும் நடவடிக்கை உறுதி
நீலகிரி மாவட்ட வன அலுவலர் கவுதம் கூறுகையில், ''வனத்துறை சார்பில், கூப்பு அமைத்து, சீகை மற்றும் கற்பூர மரங்கள் வெட்டப்படுகின்றன.
ஆனால், இப்பகுதியில் இரவில் சில்வர் ஓக் மற்றும் சீகை கற்பூர மரங்கள் கடத்தப்படுவது குறித்து புகார் ஏதும் இதுவரை வரவில்லை. குறிப்பிட்ட பகுதிகளில் சம்மந்தப்பட்ட சரக வனத்துறை அலுவலர்கள் மூலம் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதி இல்லாமல் மரம் வெட்டுபவர்கள் குறித்து புகார் அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.