/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முதுமலை காப்பகத்தில் கோடைக்கு முன்பாகவே... வறட்சியின் தாக்கம்!தாவர உண்ணிகளுக்கு உணவு தட்டுப்பாடு அபாயம்
/
முதுமலை காப்பகத்தில் கோடைக்கு முன்பாகவே... வறட்சியின் தாக்கம்!தாவர உண்ணிகளுக்கு உணவு தட்டுப்பாடு அபாயம்
முதுமலை காப்பகத்தில் கோடைக்கு முன்பாகவே... வறட்சியின் தாக்கம்!தாவர உண்ணிகளுக்கு உணவு தட்டுப்பாடு அபாயம்
முதுமலை காப்பகத்தில் கோடைக்கு முன்பாகவே... வறட்சியின் தாக்கம்!தாவர உண்ணிகளுக்கு உணவு தட்டுப்பாடு அபாயம்
ADDED : ஜன 20, 2024 01:27 AM

கூடலுார்:முதுமலையில், வறட்சியின் தாக்கம் துவங்கியுள்ளதால் தாவர உண்ணிகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.
கூடலுார், முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்கு பருவமழை பெய்யவில்லை. இதனால், கோடைக்கு முன்பாகவே வறட்சியின் தாக்கம் துவங்கி உள்ளது.
வன விலங்குகளின் முக்கிய வாழ்விடமான முதுமலை புலிகள் காப்பகத்தில், தொடரும் பனி பொழிவால், மரங்களில் இலைகள் உதிர்ந்து, புற்கள், தாவரங்கள் கருகி, வனப்பகுதி பசுமை இழக்க துவங்கியுள்ளது.
இதனால், தாவர உண்ணிகளுக்கு கோடைக்கு முன்பாகவே உணவு தட்டுப்பாடு ஆபத்து ஏற்பட்டுள்ளது. வனத்தீ ஏற்பட்டு, உணவு தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தீ தடுப்பு கோடு அவசியம்
கர்நாடக பந்திப்பூர் புலிகள் காப்பக எல்லையை ஒட்டிய வனப்பகுதியை தவிர்த்து வேறு பகுதிகளில், தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி இதுவரை துவக்கப்படவில்லை.
வனத்தீ ஏற்படுவதை கண்காணிக்க, கூடுதல் தற்காலிக ஊழியர்கள் நியமிக்கப்பட வில்லை.
இதனால், வனத்தீ ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்துவதில், வனத்துறைக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, கோடைமழை ஏமாற்றி வறட்சியின் தாக்கம் தொடரும் பட்சத்தில், வன விலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, இடம்பெயர்ந்து செல்லும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
வறட்சி அதிகரித்து, வனத்தீ ஏற்படுவதை தடுக்க, கண்காணிப்பு பணியில் கூடுதல் ஊழியர்களை நியமிப்பதுடன், தேவையான பகுதிகளில் தீ தடுப்பு கோடுகள் அமைக்க, வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப திட்டம்
முதுமலை வனத்துறையினர் கூறியதாவது:
வனப்பகுதிகளில் வனவிலங்குகளுக்கு தற்போதைக்கு குடிநீர் தட்டுப்பாடு இல்லை என்றாலும், தாவரங்கள் கருக துவங்கி உள்ளதால், உணவு தட்டுப்பாடு துவங்கி உள்ளது.
இதே நிலை தொடர்ந்து, வனவிலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டால், குறிப்பிட்ட பகுதிகளில் வாகனங்கள் மூலம் தண்ணீர் எடுத்து சென்று, அங்குள்ள சிமென்ட் தொட்டிகளில் ஊற்றி அதன் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும்.
எனினும், சரியான நேரத்தில் கோடை மழை பெய்தால் மட்டுமே, கோடையின் போது, உணவு தட்டுப்பாடு பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். இதனால், கோடை மழையை எதிர்பார்த்து காத்துள்ளோம்.
குறிப்பாக, இவ்வழியாக பயணிக்கும் சுற்றுலா பயணிகள் வாகன ஓட்டுனர்கள் எளிதாக தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப்பகுதியில் வீசி செல்வதை தவிர்க்க வேண்டும். வனத்தீ குறித்து தெரிய வந்தால் வனத்துறைக்கு தெரிவிக்க வேண்டும் இவ்வாறு அவர்கள் கூறினர்.