/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தோட்டக்கலை துறை பணியாளர்கள் பாதிப்பு; பல ஆண்டு கோரிக்கை விடுத்தும் பயனில்லை: நிரந்தர தீர்வு எப்போது?
/
தோட்டக்கலை துறை பணியாளர்கள் பாதிப்பு; பல ஆண்டு கோரிக்கை விடுத்தும் பயனில்லை: நிரந்தர தீர்வு எப்போது?
தோட்டக்கலை துறை பணியாளர்கள் பாதிப்பு; பல ஆண்டு கோரிக்கை விடுத்தும் பயனில்லை: நிரந்தர தீர்வு எப்போது?
தோட்டக்கலை துறை பணியாளர்கள் பாதிப்பு; பல ஆண்டு கோரிக்கை விடுத்தும் பயனில்லை: நிரந்தர தீர்வு எப்போது?
ADDED : நவ 08, 2024 10:40 PM
குன்னுார் ; 'நீலகிரியில் தோட்டக்கலை பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், சுற்றுலா பயணிகளை கவரும், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, குன்னுார் சிம்ஸ் பூங்கா, ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, மரவியல் பூங்கா மற்றும் குன்னுார் கல்லார் பழப் பண்ணைகள், தும்மனட்டி தோட்டக்கலை பண்ணை, பழவியல் நிலையம் ஆகியவை உள்ளன.
இங்குள்ள பணிபுரியும் தோட்டக்கலை துறையில் உள்ள பணியாளர்கள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
அதன் விளைவாக, நீலகிரியில், 533 பேர் உட்பட 1083 பேர் நிரந்தர பணியாளர்களாக கடந்த, 2007ல் அறிவிக்கப்பட்டனர்.
பணிவரன் முறையின் போது, மற்ற துறைகளில் கால முறை ஊதியம் வழங்கப்பட்ட போது, தோட்டக்கலை பணியாளர்களுக்கு பணிக்கொடை, பென்ஷன் உள்ளிட்ட எந்த சலுகைகளும் வழங்காமல் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணி வழங்கப்பட்டது.
பிற துறையின் காலமுறை ஊதியம்
இந்நிலையில், 2012ல் வேளாண், வனம் உள்ளிட்ட துறையில் உள்ளவர்களை காலமுறை ஊதியத்தில் கொண்டு வந்த போதும், தோட்டக்கலை பணியாளர்கள் புறக்கணிக்கப்பட்டனர். பலரும் பணி ஓய்வு பெற்ற நிலையில், கடந்த, 2020ல், புதிதாக நீலகிரியில், 225 பேர் உட்பட தமிழகத்தில், 660 பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில், கள பணியாளர்கள் மாதம் முழுவதும் பணிபுரிந்து வந்த நிலையில், இவர்களை பணி வரன்முறை செய்யாமல், 10 நாட்கள் கட்டாய விடுப்பு எடுக்க உத்தரவிடப்பட்டது.
இது தொடர்பாக பணியாளர்களின் தொடர் கோரிக்கையால், ஊட்டி உள்ளிட்ட சில இடங்களில் இதற்கு தீர்வு காணப்பட்டது.
எனினும், குன்னுார் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, பழவியல் நிலையம், பழப்பண்ணை, கல்லார், பர்லியார் பண்ணைகளில் பணியாற்றும் தினக்கூலி பணியாளர்களுக்கு, 22 நாட்கள் மட்டுமே பணி வழங்கப்படுகிறது.
கோடி கணக்கில் வருமானம்
பூங்காக்களில் இதுவரை இல்லாத அளவுக்கு, நடப்பாண்டு பல மடங்கு நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதில், பூங்காவுக்குள் ஒரு கேமரா கொண்டு செல்ல, 5000 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தி வருமானம் பார்க்கும் தோட்டக்கலை துறை, பணியாளர்களின் நலனை கருத்தில் கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
தோட்டக்கலை பணியாளர்கள் கூறுகையில்,'தோட்டக்கலை துறையில் நுாற்றுக்கணக்கான தினக்கூலி பணியாளர்களுக்கு, போதிய ஊதியம் இல்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளுக்கும் பல முறை தெரிவிக்கப்பட்டும், இது வரை தீர்வு கிடைக்கவில்லை.
தர்மபுரி, கடலுார் பகுதி தோட்டக்கலை நிரந்தர பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வு நீலகிரிக்கு வழங்கவில்லை. பென்ஷன், பணிக்கொடை உள்ளிட்டவையும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
நீலகிரி மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலா மேரி கூறுகையில், ''நீலகிரியில் அதிக தோட்டக்கலை துறை பணியாளர்கள் பணிபுரிகின்றனர். குன்னுார் பகுதிகளில் பணியாளர்கள் குறைக்கப்பட்டதற்கு தீர்வு காண, உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும்.
மேலும், தர்மபுரியில் உள்ளதை போன்று இங்குள்ளவர்களுக்கும் ஊதிய உயர்வுக்கு அளிக்க இயக்குனரகத்தில் வலியுறுத்தப்படும்,'' என்றார்.