/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுார் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகளில்... ஆய்வு அவசியம்!தரமான கட்டுமானத்தை உறுதி செய்ய வேண்டும்
/
குன்னுார் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகளில்... ஆய்வு அவசியம்!தரமான கட்டுமானத்தை உறுதி செய்ய வேண்டும்
குன்னுார் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகளில்... ஆய்வு அவசியம்!தரமான கட்டுமானத்தை உறுதி செய்ய வேண்டும்
குன்னுார் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகளில்... ஆய்வு அவசியம்!தரமான கட்டுமானத்தை உறுதி செய்ய வேண்டும்
ADDED : ஆக 10, 2024 02:32 AM

குன்னுார்:'குன்னுார் ரயில் நிலையத்தில், 6.7 கோடி ரூபாயில் நடந்து வரும் சீரமைப்பு பணிகளை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து, தரமான முறையில் பணிகள் நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், நுாற்றாண்டு பழமை வாய்ந்த குன்னுார் மலை ரயில் நிலையம், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 6.7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை, நீண்ட கால தொலைநோக்கு பார்வையுடன் பன்முக தன்மையின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக, பாரம்பரியம் மாறாமல் செயல்படுத்த மத்திய ரயில்வே வாரியம் உத்தரவிட்டது.
இந்நிலையில், 'இத்திட்டத்தில் பணிகள் உரிய முறையில் நடப்பதில்லை,' என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதில், கூரையில் இருந்த, 16 அடி நீளமுள்ள, 50க்கும் மேற்பட்ட தேக்கு மரசாரம் அகற்றப்பட்டு இரும்பு கம்பிகள் பதிக்கப்பட்டது. ஒரு சில சாரங்கள் மட்டும் பதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள விலை உயர்ந்த மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.
இதேபோல, பொது பணித்துறை அலுவலக தடுப்புச்சுவரில் பில்லர்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக கட்டும் தடுப்பு சுவரில் உரிய இடங்களில் அடித்தளத்துடன் பில்லர் அமைக்காமலும், தரமில்லாமல் பணிகள் மேற்கொள்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை கண்காணிக்க வேண்டிய இங்குள்ள ரயில்வே பொதுப்பணி துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.
தரமான தடுப்புச்சுவர் வேண்டும்
கட்டட பொறியாளர்கள் சிலர் கூறுகையில்,'இங்கு கட்டப்படும் தடுப்புசுவர்கள் மண் அரிப்பை தடுக்கவும் நிலப்பரப்புகளின் நிலை தன்மையை பராமரிக்கும் வகையிலான வடிவமைக்கப்பட வேண்டும். அதில், சாலையோர தடுப்பு சுவர் செங்குத்து கட்டமைப்பு முறையில் கட்டுமானம் செய்யப்படுகிறது.
செங்குத்தான தடுப்புச் சுவர் 'கால்' எனவும், அடித்தளம் 'பாதம்' எனவும் கருதப்படுகிறது. இதன் அடிப்படையில் தக்க வைக்கும் சுவரில் அடித்தளத்திற்கு ஏற்ப உயரம், நீளம் மண்ணின் வகை, சாய்வின் கோணம் போன்ற காரணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டியது அவசியம்,' என்றனர்.
மூத்த அதிகாரிகள் ஆய்வு அவசியம்
மலை ரயில் ரத அறக்கட்டளை நிறுவன தலைவர் நடராஜன் கூறுகையில், ''யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற நுாற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயில் நிலையத்தை பாரம்பரியம் மாறாமல் பொலிவுபடுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்ட மற்றும் அகற்றப்பட்ட விலை உயர்ந்த மரங்களின் விபரங்கள் தெரியவில்லை. சுவர்களின் சில இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தற்போது, நீலகிரியில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நடந்து வரும் பணிகளை மேற்பார்வையிட ரயில்வே கட்டட பொறியாளர் பிரிவு மூத்த உயர் அதிகாரியை நியமிக்க வேண்டும். அவர் ஆய்வு செய்து தரமான முறையில் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும்,''என்றார்.

