/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் மலை மேலிட பயிற்சி மையம் திறப்பு
/
ஊட்டியில் மலை மேலிட பயிற்சி மையம் திறப்பு
ADDED : பிப் 20, 2024 11:09 PM
ஊட்டி:சென்னையில் இருந்து, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி காணொலி காட்சி வாயிலாக, ஊட்டியில், 5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மலை மேலிட பயிற்சி மையத்தை திறந்து வைத்தார்.
ஊட்டியில் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த கலெக்டர் அருணா பேசியதாவது:
விளையாட்டுத்துறையில் நாட்டிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கி, சர்வதேச அளவில், தமிழக வீரர்கள் பங்கு பெற, பயிற்சி அளிப்பது, உட் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, ஊட்டியில் திறக்கப்பட்ட எஸ்.ஏ.டி.பி., விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு புத்தாக்க திட்டத்தின் கீழ், விளையாட்டு வீரர்கள் மலை மேலிட பயிற்சி மேற்கொள்ளும் போது, இதய செயல்பாடு, தசை செயல் திறன் மற்றும் ஆரோக்கியம் மேம்பாடு, உடல் வலிமை கிடைத்துவிடும் வகையில், வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதில், அலுவலக அறை, கணினி அறை, உடற்பயிற்சி மையம், சொற்பொழிவு அரங்கம், பிசியோ அறை, மருத்துவர் அறை, தங்கும் அறை மற்றும் போட்டியில் பங்கு பெறுவதற்கு ஏதுவாக, 32 விளையாட்டு வீரர்கள் தங்கி பயிற்சி பெறும் வகையில் அமைந்துள்ளது. இதனை வீரர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார். இதில், கூடுதல் கலெக்டர் கவுசிக், பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

