/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வெளிநாட்டு சுற்றுலா பயணியர் வருகை அதிகரிப்பு
/
வெளிநாட்டு சுற்றுலா பயணியர் வருகை அதிகரிப்பு
ADDED : ஜன 28, 2025 10:07 PM

ஊட்டி,; நீலகிரி மாவட்ட சுற்றுலா தலங்களை காண வெளிநாட்டு சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்துள்ளது.
ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார் பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களை காண ஆண்டு தோறும் சீசன் காலங்களான, மே மாதம் மற்றும் இரண்டாவது சீசன் நடக்கும் செப்., மாதங்களில் வழக்கத்தை விட சுற்றுலா பயணியர் வருகை அதிகரிக்கும்.
குறிப்பாக, ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா சிகரம், படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை காண சுற்றுலா பயணியர் வருகை தருகின்றனர். ஆண்டுக்கு சராசரியாக, 35 லட்சம் பேர் சுற்றுலா பயணியர் வருகின்றனர்.
அதில், இரண்டாவது சீசன் சமயங்களில் வெளிநாட்டு சுற்றுலா பயணியர், அதிகம் பேர் வருவது வழக்கம். கொரோனாவுக்கு பின் வெளிநாட்டு சுற்றுலா பயணியர் வருகை குறைந்தாலும், கடந்த ஓராண்டாக இவர்களின் வருகை அதிகரித்துள்ளது. இங்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணியர் இயற்கை காட்சிகளை ரசிப்பதில் ஆர்வம் காட்டுவதால், வனப்பகுதிகளில் 'டிரக்கிங்' சென்று வருகின்றனர். ஊட்டியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட பழமை வாய்ந்த கட்டடங்களை பார்வையிட்டு 'போட்டோ' எடுத்து செல்கின்றனர்.
தோட்டக்கலை உதவி இயக்குனர் பீபிதா கூறுகையில், ''தாவரவியில் பூங்காவுக்கு சீசன் காலங்கள் மட்டுமின்றி, பிற நாட்களிலும் அதிகளவில் வெளிநாட்டு சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். இவர்களை கவரும் விதமாக, தாவரவியல் பூங்கா பராமரிக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.