/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'மைட்ஸ்' நோயின் தாக்கம் அதிகரிப்பு
/
'மைட்ஸ்' நோயின் தாக்கம் அதிகரிப்பு
ADDED : ஏப் 25, 2025 11:49 PM

கோத்தகிரி; கோத்தகிரி சுற்றுவட்டார பகுதி தேயிலை தோட்டங்களில், 'மைட்ஸ்' நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில், தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. இத்தொழிலை, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் மற்றும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட
தொழிலாளர்கள் நம்பியுள்ளனர். தற்போது, ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு, 22 முதல், 25 ரூபாய் வரை, தரத்திற்கு ஏற்ப விலை கிடைக்கிறது.
இடுபொருட்களின் விலையேற்றம், தொழிலாளர்களின் கூலி உயர்வு உள்ளிட்ட செலவினங்களை கணக்கிட்டால், தற்போது, கிடைத்து வரும் இந்த விலை போதுமானதாக இல்லை. கடந்த காலங்களை காட்டிலும், இந்த விலை கிடைப்பதால் விவசாயிகள் ஓரளவு ஆறுதல் அடைந்துள்ளனர். இந்நிலையில், தற்போது நிலவி வரும் காலநிலை மாற்றத்தால், உஷ்ணம் அதிகரித்து, பெரும்பாலான தோட்டங்களில், 'மைட்ஸ்' எனப்படும் சிவப்பு சிலந்தி நோயின் தாக்கம், அதிகரித்து வருகிறது. இதனால், பசுந்தேயிலை வரத்து குறைந்து, விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு அதிகரித்துள்ளது. மழை பெய்தால் மட்டுமே, நோயின் தாக்கம் குறைந்து, மகசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.