வறட்சி வாட்டி வரும் நிலையில் உரத்தின் விலையும் அதிகரிப்பு!மானியத்தில் வழங்கினால் சிறு விவசாயிகளுக்கு நிம்மதி
வறட்சி வாட்டி வரும் நிலையில் உரத்தின் விலையும் அதிகரிப்பு!மானியத்தில் வழங்கினால் சிறு விவசாயிகளுக்கு நிம்மதி
UPDATED : ஆக 17, 2026 05:09 PM
ADDED : ஆக 17, 2026 05:01 PM

ஊட்டி: பருவமழை பொய்த்து, வறட்சி வாட்டி வரும் நிலையில், உரத்தின் விலையும் அதிகரித்து வருவதால், நீலகிரியில் பல்லாயிரம் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில், 60 ஆயிரம் ஏக்கரில் தேயிலை சாகுபடி மற்றும், 25 ஆயிரம் ஏக்கரில் மலை காய்கறிகள் உற்பத்தியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதில், தேயிலை, மலை காய்கறி தோட்டங்களை பராமரிக்க, 'யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ்,' உள்ளிட்ட உரங்களை விவசாயிகள் பயன்படுத்துகின்றனர்.
உரங்கள், ஊட்டியில் உள்ள என்.சி.எம்.எஸ்., கூட்டுறவு நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் மாவட்ட முழுவதும், 19 கூட்டுறவு நிறுவனங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதில், விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரங்கள் தட்டுப்பாடின்றி தரமான விற்பனை செய்வது குறித்து, உர கட்டுப்பாட்டு துறையினரும் கண்காணிக்கின்றனர்.
விவசாயிகள் தவிப்பு இதற்கிடையே, நடப்பாண்டு கோடை மழை, தென்மேற்கு பருவ மழை பொய்த்த நிலையில், வறட்சியால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்காத நிலையில், தினமும் விலை கொடுத்து தண்ணீர் வாங்கி விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு புறம் இருக்க தற்போது உரங்களின் விலையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இதனால், சிறு மற்றும் குறு விவசாயிகள் உரங்களை வாங்க முடியாமல் திண்டாடி வருகின்றனர். விவசாயிகளின் நலன் கருதி தேயிலை மற்றும் மலை காய்கறிகளுக்கு பயன்படுத்தப்படும் உரங்களுக்கான விலையை அரசு குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என, சிறு விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மானியம் கிடைத்தால் பயன் சிறு விவசாயிகள் கூறுகையில் , 'நீலகிரியில் தேயிலை, மலை காய்கறி சாகுபடிக்கு
யூரியா , டி.ஏ.பி. , பொட்டாஷ் , சூப்பர் பாஸ்பேட் , காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட, 10 க்கும் மேற்பட்ட வகையான உரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த உரங்கள் தேயிலை தோட்டங்களுக்கு அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காத நிலையில் விவசாயிகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர். அதே சமயத்தில் காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மலை காய்கறி விவசாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதால் உரங்களின் விலையை குறைப்பதுடன் மானியத்தில் உரங்கள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
