/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அதிகரித்து வரும் மழை; அச்சத்தில் சூரல் மலை மக்கள்
/
அதிகரித்து வரும் மழை; அச்சத்தில் சூரல் மலை மக்கள்
ADDED : ஜூன் 26, 2025 09:25 PM

பந்தலுார்; கேரளா மாநிலம் வயநாடு மேப்பாடி அருகே சூரல்மலையில் ஏற்பட்ட மழையின் தாக்கத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கேரளா மாநிலம் வயநாடு மேப்பாடி அருகே சூரல்மலையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பாதிப்பில் இருந்து அப்பகுதி மக்கள் இன்னும் மீளவில்லை.
இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக தொடரும் மழையால் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இங்குள்ள தேயிலை தோட்டத்தில் வேலைக்கு சென்று வந்த மக்கள், கடந்த சில நாட்களாக வேலை இழந்து தவித்து வருகின்றனர்.
இப்பகுதியில் ஆய்வு செய்த எம்.எல்.ஏ., சித்திக் கூறுகையில்,'' கடந்த ஆண்டு நடந்த பேரிடர் பாதிப்பின் போது, அரசு அறிவித்த திட்டங்கள் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. மேலும், புனரமைப்பு பணிக்காக, 195 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அதனை இதுவரை செயல்படுத்தாமல் உள்ளனர்.
ராணுவத்தினர் அமைக்கப்பட்ட பேலி பாலத்தை, மாநில அரசு முழுமையாக சீரமைக்காத காரணத்தால், நேற்று முன்தினம் பெய்த கனமழையில் பாலத்தின் அடியில் வைக்கப்பட்டிருந்த கற்கள் அனைத்தும் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு, அடிப்பாகத்தில் அமைக்கப்பட்டிருந்த சிமென்ட் தளம் விரிசல் அடைந்து பாலம் பலமிழந்து வருகிறது.  பாதிக்கப்பட்ட மக்களை அரசு காக்க வேண்டும்,'' என்றார்.
அங்குள்ள பாலத்தின் அடிப்பகுதியில், பொக்லைன் உதவியுடன், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், மழை வெள்ளம் ஆற்றில் வழிந்து விட ஏதுவாக சீரமைப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இதனால், தற்காலிகமாக பாலத்தின் வழியாக பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் கடந்து செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

