/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆண்டு வருமானம் குறைவாக இருப்பவர்களுக்கு இலவச சேவை; சட்டப் பணிகள் ஆணைகுழு செயலாளர் தகவல்
/
ஆண்டு வருமானம் குறைவாக இருப்பவர்களுக்கு இலவச சேவை; சட்டப் பணிகள் ஆணைகுழு செயலாளர் தகவல்
ஆண்டு வருமானம் குறைவாக இருப்பவர்களுக்கு இலவச சேவை; சட்டப் பணிகள் ஆணைகுழு செயலாளர் தகவல்
ஆண்டு வருமானம் குறைவாக இருப்பவர்களுக்கு இலவச சேவை; சட்டப் பணிகள் ஆணைகுழு செயலாளர் தகவல்
ADDED : பிப் 04, 2025 11:28 PM

ஊட்டி; 'ஆண்டு வருமானம், 3 லட்சத்திற்கும் மிகாமல் உள்ளவர்கள் இலவச சட்ட சேவைகளை பெற தகுதியானவர்கள்,' என, சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் கூறினார்.
நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் சட்டம் குறித்த புகைப்பட கண்காட்சி நடந்தது. சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான முரளிதரன் தலைமை வகித்து, சட்ட விழிப்புணர்வு முகாம் அரங்கை திறந்து வைத்தார். தொடர்ந்து, சுற்றுலா பயணிகள், பள்ளி மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு சட்டம் சார்ந்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
தொடர்ந்து, சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் பாலமுருகன் பேசியதாவது:
சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு இலவச சட்ட சேவைகள் வழங்க தேசிய சட்டப்பணிகள் ஆணையம் நிறுவப்பட்டது.
அதன்படி, 'தகுதியுள்ள நபர்களுக்கு இலவச மற்றும் தகுந்த சட்டப்பணிகள் வழங்குதல்; தகராறுகளை இணக்கமாக சமரசம் செய்ய மக்கள் நீதிமன்றங்கள் அமைத்தல்; சமுதாயத்தில் நலிந்த மற்றும் ஒதுக்கப்பட்ட பிரிவினர்களின் உரிமைகள் பற்றிய சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துதல்; சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல்,' உள்ளிட்ட செயல்பாடுகள் சட்ட பணிகள் ஆணை குழு மூலம் நடக்கிறது.
பழங்குடியினருக்கு பயன்
பட்டியல் ஜாதியினர் அல்லது பட்டியல் பழங்குடியினர், பிச்சை எடுப்பவர்கள், பெண்கள், குழந்தைகள். மாற்றுத்திறனாளிகள், பேரழிவு, ஜாதி வன்கொடுமை, வெள்ளம், பஞ்சம், நில அதிர்ச்சி, தொழில் அழிவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் உதவி பெறலாம்.
மேலும், தொழிற்சாலை தொழிலாளர்கள், சிறை காவலில் இருப்போர், பாதுகாப்பு இல்லத்தில் உள்ள இளம் குற்றவாளிகள், மனநல மருத்துவமனையில் உள்ளவர்களும் ஆணைக்குழு மூலம் உதவி பெறலாம்.
ஆண்டு வருமானம், 3 லட்சத்துக்கும் மிகாமல் உள்ளவர்கள் இலவச சட்ட சேவைகளை பெற தகுதி வாய்ந்தவர்களாக கருதப்படுவர். சட்ட உதவி மற்றும் ஆலோசனைக்கு, ஊட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழுவை நேரில் அணுகலாம். மேலும், 15100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் பேசினார்.
அதில், ஊட்டி குடும்ப நல நீதிபதி லிங்கம், தொழிலாளர் நல நீதிமன்ற நீதிபதி சந்திரசேகரன், தலைமை நீதித்துறை நடுவர் சசிகலா, சார்பு நீதிமன்ற நீதிபதி பாரதி பிரபா உட்பட பலர் பங்கேற்றனர்.